மலைவாழ் மக்களின் வீட்டில் ஆசிரியர் பாடம் நடத்தும் திட்டம் முன்னோட்டம்: அமைச்சர்
கொல்லிமலையில், மலைவாழ்மக்களுக்கு தானியங்களை உலர்த்தும் சோலார் டிரையர்களை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி வழங்கினார்.
தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் கொல்லிமலையில் செங்கரையில் உள்ள ஏகலைவா மாதிரி மேல்நிலைப்பள்ளி, முள்ளுக்குறிச்சி, ராசிபுரம் ராஜபாளையம், நாமகிரிப்பேட்டை ஆதிதிராவிடர் பள்ளி, கல்லூரி ஹாஸ்டல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, கொல்லிமலையில், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி முன்னிலையில், பழங்குடியின மக்களுக்கு உணவு தானியங்களை காயவைக்கும் சோலார் டிரையர் கருவிகளை வழங்கிய அமைச்சர் கயல்விழி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கொல்லிமலை செங்கரையில் உள்ள ஜி.டி.ஆர் உண்டு உறைவிட பள்ளியில் ஆய்வு செய்தேன். அரசு அறிவிப்பு வந்தவுடன் பள்ளிகள் திறக்கப்படும். அதற்கு முன், மாணவர்களுக்கு தேவையான வசதிகள் இருக்கிறதா, ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதா போன்ற பணிகளை ஆய்வு செய்து வருகிறோம். செங்கரை, முள்ளுக்குறிச்சி பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு, சோலார் டிரையர் வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு சென்று, எம்பிபிஎஸ் படிக்க விரும்பும் மலைவாழ் பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு, கவுன்சலிங் கொடுத்து அனுப்பி வைப்பதற்கு, துறை சார்பில் ஏற்பாடு செய்து வருகிறோம். நாமக்கல் மாவட்டம் போதமலை மற்றும் அந்தியூர், வால்பாறை பகுதிகளிலும் ரோடு வசதி குறைவாக உள்ளது. இது குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.
மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு, அவர்கள் குடியிருக்கும் பகுதிக்கே, ஆசிரியர்கள் வாகனத்தில் சென்று பாடம் சொல்லித்தரும் திட்டம், தற்போது முன்னோட்ட நிலையில் உள்ளது. முன்மாதிரியாக 2 மாவட்டங்களில் மட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் வெற்றியைப் பொருத்து மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu