புதிதாக கட்டும் வீடுகளுக்கு மழைநீர் சேகரிப்பு கட்டாயம்: கலெக்டர் வலியுறுத்தல்

நாமக்கல் மாவட்டம், பொம்ம சமுத்திரம் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பொம்மசமுத்திரம் ஊராட்சியில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் மலர்க்கொடி தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் பேசிய கலெக்டர், கொரோனா நோய் தடுப்புசி முகாம்களில் அனைவரும் தடுப்புசி செலுத்திக் கொள்ள வேண்டும். வெளியில் செல்லும்போது, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை புதுப்பித்து, வடகிழக்கு பருவமழையின் போது மழைநீரை சேகரிக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் புதியதாக கட்டப்படும் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு கட்டாயம் ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டினை முழுமையாக தவிர்க்க வேண்டுமென அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து பொம்மசமுத்திரம் அரசு தொடக்கப்பள்ளியில் கலெக்டர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், டிஆர்ஓ மஞ்சுளா, பஞ்சாயத்துகள் உதவி இயக்குநர் கலையரசு, சேந்தமங்கலம் பிடிஓக்கள் புஷ்பராஜன், பாஸ்கரன், தாசில்தார் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu