திருந்திய நெல் சாகுபடி முறையை கடைபிடித்து அதிக மகசூல் பெறலாம்: விவசாயிகளுக்கு ஆலோசனை

திருந்திய நெல் சாகுபடி முறையை கடைபிடித்து அதிக மகசூல் பெறலாம்: விவசாயிகளுக்கு ஆலோசனை
X

கொல்லிமலையில் திருந்திய நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயத் தோட்டம்.

கொல்லிமலை பகுதி விவசாயிகள் திருந்திய முறையில் நெல் சாகுபடி செய்து, அதிக லாபம் பெறலாம் என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கொல்லிமலை வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கொல்லிமலை வட்டாரத்தில் கார் மற்றும் நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கார் பருவத்தில் 600 எக்டர் பரப்பிலும், நவரை பருவத்தில் 600 எக்டர் பரப்பிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

திருந்திய நெல் சாகுபடி முறையினை மேற்கொள்ள விவசாயிகள் தரமான சான்று பெற்ற உயர் விளைச்சல் நெல் ரகங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கர் நடவு மேற்கொள்ள 2 கிலோ நெல் விதையைக் கொண்டு 1 சென்ட் பரப்பில் மேடைப்பாத்தி அமைத்து நாற்றங்கால் தயாரித்திட வேண்டும்.

8 முதல் 14 நாட்கள் வயதுடைய இளம் நாற்றுக்களை சதுர முறையில் வரிசையாக 25 செ.மீ இடைவெளியில் ஒரு குத்துக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும். காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் பாசனம் செய்ய வேண்டும். கோனாவீடர் களையெடுக்கும் கருவியைக் கொண்டு நடவு செய்த 10 நாள் முதல் 10 நாட்கள் இடைவெளியில் நான்கு முறை களையெடுக்க வேண்டும்.

மேல் உரமாக யூரியாவை வேப்பம் புண்ணாக்குடன் கலந்து பிரித்து வயலுக்கு இட வேண்டும். மேலும் பூச்சி, நோய் தாக்குதலுக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் அனைத்தையும் கடைபிடித்து விவசாயிகள் அதிக மகசூல் பெற்று பயனடையலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!