கொல்லிமலையில் ரூ.338.79 கோடியில் நீர்மின் திட்டப்பணி: கலெக்டர் ஆய்வு

கொல்லிமலையில், ரூ.338.79 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நீர்மின் திட்ட பணிகளை. கலெக்டர் ஆய்வு செய்தார்.

கொல்லிமலை புதிய நீர்மின் திட்டம் ரூ.338.79 கோடி மதிப்பீட்டில், வளப்பூர் நாடு கிராம பகுதிகளில், அய்யாறு ஆற்றின் கிளை ஓடைகளின் குறுக்கே அசக்காடுபட்டி, கோவிலூர், தெளியங்கூடு, இருங்குளிப்பட்டி மற்றும் காடம்பள்ளம் ஆகிய 5 இடங்களில் கலிங்குகள் அமைத்து மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை பயன்படுத்தி, 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அய்யாறு ஆற்றின் கிளை நதிகளில் கிடைக்கும் மழைநீரை, இருங்குளிப்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் கலிங்கில் இருந்து, சுரங்கம் மூலமாக செல்லிப்பட்டிக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து இருந்து குழாய் மூலம் கொல்லிமலையின் தெற்குப் பகுதியில் உள்ள புளியஞ்சோலைக்கு அருகே, அடிவாரத்தில் நீர்மின் நிலையம் அமைத்து 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது. மின் உற்பத்தி செய்த பிறகு, இத்திட்டத்திற்கு பயன்பட்ட தண்ணீரை மீண்டும் அய்யாறு நதியிலேயே விடப்படும்.

இத்திட்டத்தின் மூலம், ஆண்டுக்கு 71.23 மில்லியன் யூனிட் மின்சாரம் கிடைக்கும். கொல்லிமலை நீர்மின் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் கலிங்குகளில் தேக்கப்படும் தண்ணீரால் கொல்லிமலை பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும் வனவிலங்குகளுக்கு இந்த தண்ணீர் குடி நீராகப் பயன்படும். இந்த நீர்மின் திட்ட பணிகளால் கொல்லிமலை பகுதியில் சுற்றுலா மேம்படும்.

நீரைக் கொண்டு செல்ல, சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தில், இருங்குளிப்பட்டியில் இருந்து செல்லிப் பட்டியை நோக்கி 1,522 மீட்டர் நீளத்திற்கும், எதிர்முனையான செல்லிப்பட்டியில் இருந்து இருங்குளிப்பட்டியை நோக்கி 1,383 மீட்டர் நீளத்திற்கும் என மொத்தம் இதுவரை 2,905 மீட்டர் நீளத்திற்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு முனைகளுக்கும் இடைய மீதமுள்ள 700 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

கொல்லிமலை நீர்மின் திட்டத்திற்காக இருங்குளிப்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதையில், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா, நீர்மின் திட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் ராமச்சந்திரன், செயற்பொறியாளர் பத்மநாபன் ஆகியோருடன் 1,500 மீட்டர் தூரம் வரை நடந்து சென்று, பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கொல்லிமலை நீர்மின் திட்டத்தின் கீழ் தெளியங்கூடு பகுதியில் நீரினை சேகரிப்பதற்காக கட்டப்பட்டு வரும் கலிங்கினையும் அவர் நேரில் பார்வையிட்டார்.

ஆய்வில் பிஆர்ஓ சீனிவாசன், நீர்மின் திட்ட உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சத்யா, பழங்குடியினர் நலத்துறை திட்ட இயக்குநர் ராமசாமி, கொல்லிமலை தாசில்தார் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!