நாமக்கல் அருகே மாடுகளுடன் பொதுமக்கள் சாலை மறியல்
நாமக்கல் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மாடுகளுடன் பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த எருமப்பட்டி அருகே உள்ள பொன்னேரி கோம்பையில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அவர்களது விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.இந்த நிலையில் பொன்னேரி கோம்பைக்கு செல்லும் பாதையானது தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி பாலசுப்பிரமணியமும், பழனிச்சாமி என்பவரும் ஆக்கிரமித்து வழித்தடத்தில் தடுப்புகளை அமைத்துள்ளனர்.இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கறவை மாடுகளுடன் வந்து பொன்னேரியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எருமப்பட்டி போலீசார் விவசாயிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.
ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் யாரவது நேரில் வந்து உறுதி அளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அருளண்ணன் தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் அடிப்படையில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியலால் எருமப்பட்டி - நாமக்கல் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu