துணிவு, வாரிசு ரிலீஸ்: ரசிகர்கள் ஊர்வலமாக செல்ல தடை
பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை அஜித் நடித்த துணிவு என்ற திரைப்படமும், விஜய் நடித்த வாரிசு என்ற திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது. இதற்காக கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 70 தியேட்டர்களில், 50-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் துணிவு மற்றும் வாரிசு படங்கள் ரிலீஸ் ஆகிறது. இன்று நள்ளிரவு முதல் காட்சிகளை திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ரூ.2000 வரை கொடுத்து ஏராளமானவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் படம் ரிலீஸ் ஆனவுடன் இருதரப்பு ரசிகர் மன்றத்தினருக்குமிடையே தகராறு ஏற்பட்டு, அதனால் தியேட்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ரசிகர் மன்றங்களுக்கு காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதன்படி,
- தியேட்டர் வளாகத்திலும், பொது இடங்களிலும் மேளம் அடித்துக்கொண்டு, ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்யக்கூடாது. சினிமா பார்க்க வரும் பொது மக்களுக்கு தொல்லை செய்யக்கூடாது.
- சினிமா தியேட்டருக்குள் வரும் ரசிகர்கள் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை எதையும் எடுத்து வரக்கூடாது.
- குடிபோதையில் தியேட்டருக்கு வரக்கூடாது. மேடை மீது ஏறி ஆட்டம் போடக்கூடாது.
- தியேட்டரில் பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டால் ரசிகர் மன்றங்களே பொறுப்பேற்று அதற்குரிய இழப்பீடு தரவேண்டும்.
- ரசிகர் மன்ற காட்சிகள் திரையிடும் போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு சம்பந்தப்பட்ட ரசிகர் மன்றங்களே பொறுப்பேற்க வேண்டும்.
- ரசிகர்களை ஒழுங்குபடுத்த போதுமான தன்னார்வலர்களை ரசிகர் மன்றத்தினர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் நியமிக்க வேண்டும்
என்றும் காவல்துறை தரப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் நகரில் 2 தியேட்டர்களில் இந்த திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிறது. நள்ளிரவு காட்சிக்கும், ரசிகர் மன்ற காட்சிக்கும் ஒரு டிக்கெட் ரூ.1000 வரை கட்டணம் வசூலித்து முன்பதிவு செய்துள்ளனர். நாமக்கல் நகரில் 2 தியேட்டர்களிலும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் அசம்பாவிதங்களை தடுக்க, இங்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் ஊர்வலமாக சொல்லக்கூடாது. மேலும் சினிமா பார்க்க வருபவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது. குடிபோதையில் தியேட்டர்களுக்குள் வரக்கூடாது, மேடையின் மீது ஏறி ஆட்டம் போடக்கூடாது என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தியேட்டர்கள் முன்பு கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu