மலைவாழ் மக்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
இராசிபுரம் அருகே ஜம்பூத்து மலையில் வசிக்கும் மலைவாழ் பெண்ணுக்கு, ரோட்டரி சங்கம் சார்பில் பசு தானமாக வழங்கப்பட்டது.
இராசிபுரம் தாலுக்காவில், ஜம்பூத்துமலை கிராமம் உள்ளது. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் போதிய குடிநீர் வசதி, சுகாதார வசதி, ரோடு வசதி, தடுப்பணை, பள்ளி கட்டிட வசதி போன்றவை இல்லை.
இதனை கருத்தில் கொண்டு, ராசிபுரம் ரோட்டரி சங்கம் மற்றும் நாமக்கல் இன்ஃபினிடிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து ரூ.35 லட்சம் மதிப்பீட்டில், திட்டப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்துள்ளன. இத்திட்டத்தின்கீழ், ரூ.5 லட்சம் மதிப்பில் சிறு தடுப்பணை அமைக்கப்பட்டு, பொதுமக்களின் குடிநீர் வசதிக்காக மின் மோட்டார் பொருத்தி, குழாய் அமைத்துத் தரப்பட்டுள்ளது. வீதிகள் தோறும் சோலார் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் கல்வித்துறை அனுமதியுடன், ரூ.24 லட்சம் மதிப்பில் புதிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவர்கள் அன்பழகன், சந்தோஷ் கண்ணன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர். இராசிபுரம் ரோட்டரி சங்கச் செயலர் சுரேந்திரன் வரவேற்றார்.
ரோட்டரி மண்டல உதவி கவர்னர்கள் குணசேகர், செல்வகுமார், ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ரோட்டரி கவர்னர் சுந்தரலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி கட்டிட திட்டப்பணிகளை துவக்கி வைத்துப் பேசினார். விழாவில் மலை கிராமப்பெண் ஒருவருக்கு பசு தானமாக வழங்கப்பட்டது.
விழாவில், ரோட்டரி சங்க முன்னாள் உதவி கவர்னர்கள் பாலாஜி, பிரகாஷ், கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் ராமகிருஷ்ணன், ரோட்டரி மாவட்ட பொதுச்செயலர் ஜாகிர் அகமது, மாநாட்டு மேம்பாடு திட்டத் தலைவர் வினோத், ராசிபுரம் ரோட்டரி சங்கப் பொருளாளர் கண்ணன், நாமக்கல் இன்ஃபினிட்டி ரோட்டரி சங்கச்செயலர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் சிவசந்திரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu