தூத்துக்குடியில் முந்திரியுடன் லாரி கடத்தல்: இராசிபுரம் அருகே மடக்கிப்பிடிப்பு

தூத்துக்குடியில் இருந்து முந்திரி பாரத்துடன் கடத்தப்பட்டு, ராசிபுரம் அருகே போலீசாரால் பிடிக்கப்பட்ட கன்டெயினர் லாரி.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியில் இருந்து, ஜப்பான் நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ரூ. 1.10 கோடி மதிப்பிலான 12 டன் முந்திரி, கன்டெய்னர் லாரி மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஹரி என்பவர் லாரியை ஒட்டிச்சென்றார். அப்போது, காரில் வந்த ஒரு கும்பல் திடீரென்று லாரியை வழிமறித்து, டிரைவரை அடித்து கீழே தள்ளிவிட்டு, லாரியை கடத்திச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து டிரைவர் ஹரி, முந்திரி ஆலை மேனேஜர் ஹரிஹரனுக்கு தகவல் கொடுத்தார். அவரது புகாரின்பேரில், தூத்துக்குடி மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து லாரியைப் பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். தூத்துக்குடி மாவட்ட ஏடிஎஸ்பி சந்தீஷ்குமார் தலைமையிலான போலீசார் நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் லாரியை கண்காணித்தபடி சென்றனர்.
லாரியைக் கடத்திய கும்பல், ஒரு காரில் லாரிக்கு பின்னால் செல்வதையும் போலீசார் கண்டறிந்தனர். அந்த லாரி நாமக்கல் மாவட்டத்துக்குள் செல்வதை அறிந்த போலீசார், நாமக்கல் மாவட்ட போலீசார் உதவியுடன், மாவட்ட எல்லையான மங்களபுரம் போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட திம்மநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில், காரில் சென்ற கும்பலையும் லாரியையும் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரனையில், அவர்கள் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஜெபசிங் மற்றும் அவரது நண்பர்கள் விஷ்ணுகுமார், மனோகரன், மாரிமுத்து ராஜ்குமார், செந்தில்குமார், பாண்டி என்பதும், அவர்கள் முந்திரியுடன் கன்டெய்னர் லாரியை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையொட்டி அவர்களைக் கைது செய்த போலீசார், பிடிபட்ட முந்திரி பாரம் ஏற்றிய கன்டெய்னர் லாரியை தூத்துக்குடி மாவட்டத்துக்கு எடுத்துச்சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu