/* */

நவீன யுகத்திலும் மலை கிராமங்களின் அவலம்: கழுதை மூலமே பொருட்கள் (சிறப்புப் பார்வை)

இராசிபுரம் பகுதியில் மலைவாழ் கிராமங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு சேர்ப்பதற்காக நவீன யுகத்திலும் கழுதைகள் பயன்படுத்தும் அவலநிலை உள்ளது.

HIGHLIGHTS

நவீன யுகத்திலும் மலை கிராமங்களின் அவலம்: கழுதை மூலமே பொருட்கள் (சிறப்புப் பார்வை)
X

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு செல்லும் குறுகலான ஒத்தையடிப்பாதை. (அடுத்த படம்) அனைத்து பொருட்களும் கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

இராசிபுரம் பகுதியில் மலைவாழ் கிராமங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு சேர்ப்பதற்காக இன்றளவும் கழுதைகள் பயன்படுத்தும் அவலநிலை உள்ளது.

மலைகிராமம்:

நாட்டில் நாகரீக வளர்ச்சி, நவீன கட்டமைப்பு வசதிகள், தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு போன்றவை அபரிதமாக வளர்ச்சியடைந்துள்ள டிஜிட்டல் யுகம் தற்போது இருந்து வரும் நிலையிலும், இன்னும் நாட்டின் பல்வேறு மூலை முடுக்குகளில் உள்ள பொதுமக்கள் அடிப்படை வசதி கூட இல்லாமல், பின்தங்கியே உள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள மலை கிராம் கீழூர். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 அடி உயரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது. வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இந்த மலை கிராமத்தில் கீழூர், கெடமலை, மேலூர் என பல்வேறு குக் கிராமங்கள் உள்ளன. 1958-ல் கீழூர் தனி பஞ்சாயத்தாக உருவாக்கப்பட்டது. இதன் கீழ் கெடமலை, மேலூர் உள்ளிட்ட 7 கிராமங்கள் சேர்க்கப்பட்டன. இந்த கிராமங்களில் சுமார் 350 -க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 2500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

குறுகிய மலைப்பாதை:

இந்த மலை கிராமத்துக்கு செல்வதற்கு கல்லங்குளம், வடுகம், ஜம்பூத்துமலை போன்ற பல்வேறு பகுதிகள் வழியாக சுமார் 10 கி.மீ தூரம் ஒத்தையடி பாதையில் நடந்து தான் செல்ல வேண்டும். மலை மீது அமைந்திருப்பதால் கடந்த பல ஆண்டுகளாக இந்த கிராமத்தில் முறையான சாலை வசதி, மின்சார வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கல்வி என எதுவும் நடைமுறைப்படுத்தவில்லை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மின்பாதை அமைத்து மின்வசதி செய்து தரப்பட்டது. இதே போல் தொடக்கக்கல்வி, சுகாதார அடிப்படை வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. ஆனால் அங்கு ஆசிரியர்கள், சுகாதார பணியாளர்கள் சென்று திரும்புவது மிகவும் கடினம். மலைõவாழ் மக்களின் அத்தியாவசிய தேவையான உணவு பொருட்களை ரேசன் கடைகளில் வாங்குவதற்கு கூட 10 கீ.மீ. தூரம் குறுகிய மலைப்பாதையில் சென்று வர வேண்டியுள்ளது.

டோலி பயன்பாடு:

மலை கிராம மக்களுக்கு உடல் நலக்குறைவு, அவசர சிகிச்சை என்றால் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு நோயாளிகளை தொட்டில் கட்டி டோலி மூலம்தான் நகர்புறங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் மலை கிராமத்தைச் சேர்ந்த யாராவது வெளியூர்களில் இறந்து விட்டால் அவர்களின் உடலை மலை அடிவாரத்தில் இருந்து டோலி மூலமே மேலே தூக்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கர்ப்பிணி பெண்களை பிரசவத்திற்காக நகர்ப்புற ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்துச் செல்லவும் இதே அவல நிலை தான் நீடிக்கிறது. மலையிலிருந்து இறங்கி ஏறுவதற்கு சுமார் 4 மணி நேரம் ஆகும்.

கழுதை பயன்பாடு:

இது போன்ற சூழலில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், அரசு கொடுக்கும் ரேசன் பொருட்கள், பொங்கல் பரிசுகள், கட்டுமானப் பொருட்கள், தானியங்கள் போன்றவற்றை கீழே வந்து பெற்றுக்கொண்டு தலைச்சுமையாகக் கொண்டு செல்ல முடியாத நிலையில், பல ஆண்டுகாலமாக கழுதை மீது ஏற்றி தான் கொண்டு செல்ல வேண்டும். இந்த நடைமுறை தொடர்ந்து பல ஆண்டுகளாக இன்றளவும் தொடர்கிறது.

கல்லங்குளம், வடுகம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள ரேஷன் கடைகளில் மாதந்தோறும் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவு பொருட்களை மலை கிராமத்துக்கு கொண்டு செல்ல இக்கிராம மக்கள் தற்போதும் கழுதைகளைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கென வளர்க்கப்பட்டு வரும் கழுதைகள் மூலம் மலை கிராம மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள், தானியங்கள், கட்டுமான பொருட்களான சிமெண்ட், மணல், ஜல்லி போன்றவற்றை வாரந்தோறும் எடுத்துச்ச் சென்று வருகின்றனர்.

கழுதை வாடகை:

அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (63) என்பவர் வளர்த்து வரும் கழுதைகள் தான் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றன. ராஜேந்திரன் வளர்த்து வரும் 8 கழுதைகள் அத்தியாவசிய பொருட்களை மேலே எடுத்துச்செல்ல வாடகையாக 50 கிலோ எடைக்கு கழுதை ஒன்றுக்கு ரூ.200 வீதம் வாடகை வசூலித்து வருகிறார்.

இது குறித்து ராஜேந்திரன் கூறுகையில், பல ஆண்டுகளாக இது போன்று மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பொருட்களை கழுதைகள் மூலம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுவருகிறேன். தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள பல்வேறு மலை கிராமத்திற்கு கழுதைகளை பயன்படுத்தி இது போன்று பொருட்களை கொண்டு சேர்த்து வருகிறேன்.

கழுதை ஒன்றின் மீது 50 கிலோ சுமை வைத்து பொருட்களை கொண்டு செல்வோம். வாரம் ஒரு நாள் மலைக்கிராமத்துக்கு பொருட்கள் கொண்டு சென்று வருவதன் மூலம் கழுதை ஒன்றுக்கு ரூ.200 வாடகையாக கிடைக்கும். கழுதைக்கு தீவனப்புல், தவிடு, மாட்டுத்தீவனம் கொடுத்து பராமரித்து வருகிறோம். இது தான் குலத்தொழிலாக செய்து வருகிறோம். எங்களுக்கு பின்னர் இத்தொழிலை எடுத்து நடத்திட தற்போதைய தலைமுறையினர் முன்வரமாட்டார்கள். காலம் காலமாக இத்தொழிலையே நம்பி செய்து வரும் எங்களுக்கு அரசு உதவிகள் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

அரசுக்கு வேண்டுகோள்:

இந்த மலை கிராமத்தில் சுமார் 2500 பேர் வசித்து வரும் நிலையில், நவீனத்துவம் வளர்ந்துள்ள காலத்திலும் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் போன்ற பொருட்கள் கொண்டு செல்லும் பணியில் இன்றளவும் கழுதைகள் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது வேதனை. இம்மலை வாழ் மக்களின் நிலை, இன்னும் பல கிராமங்கள் அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க முடியாத நிலையில் உள்ளது என்பதை காட்டுவதாக உள்ளது. தமிழக அரசு இந்த மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்தால், அங்கு வசிப்பவர்கள் எளிதாக வெளியூர்களுக்கு வந்து செல்லவும், தேவையான பொருட்களை வாங்கிச்செல்லவும் வசதியாக இருக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

Updated On: 23 Jan 2022 11:40 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?