பிரிந்த பெற்றோரை சேர்க்க முடியாமல் விரக்தி: பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

பிரிந்த பெற்றோரை சேர்க்க முடியாமல் விரக்தி: பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்

கருத்து வேறுபாட்டால் பிரிந்த பெற்றோரை சேர்த்து வைக்க முடியாமல் விரக்தியடைந்த 12ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுக்கா, நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாரைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (46). இவர் போர்வெல் வண்டியில் டிரில்லராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மேகலா (38) என்ற மனைவி, நர்மதா (19) என்ற மகள், தருண் (17) என்ற மகன் உள்ளனர்.

தருண் நாரைக்கிணறு அருகே உள்ள உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு பிரிந்தனர். சேந்தமங்கலம் அருகே மேலப்பாளையத்தில் மகனுடன் மேகலா வசித்து வந்தார். இந்நிலையில் பெற்றோரை சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் தருணுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த சில தினங்களுக்கு முன் தந்தை ரவி வேலை செய்யும் இடத்திற்கு தருண் சென்றுள்ளார். அப்போது, தந்தையைக் காண முடியவில்லை. இதில் தருண் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இச்சூழலில் இன்று அதிகாலை மேலப்பாளையம் அருகில் உள்ள செங்கோட்டை காடு எனும் இடத்தில் தருண் சேலையில் தூக்குப்போட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற பேளுக்குறிச்சி போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பெற்றோரை சேர்த்து வைக்க முடியாமல் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself