வெண்ணந்தூர் ஒன்றியத்தில் ரூ.3.68 கோடி மதிப்பு திட்டப்பணிகள்: அமைச்சர் ஆய்வு
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை அமைச்சர் மதிவேந்தின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழக அரசின் உத்தரவின்படி, நாமக்கல் மாவட்டத்தில் நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கு மீள்நிரப்பு அமைப்பு பணிகளான, தனிநபர் நிலங்களில் பண்ணைக்குட்டைகள் அமைத்தல், அரசு புறம்போக்கு நிலங்களில் சமுதாய பண்ணைக்குட்டைகள் அமைத்தல், மற்றும் பல்வேறு வகையான நீர் சேகரிப்பு அமைப்புகள் அமைத்திட 1,657 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், நடுப்பட்டி பஞ்சாயத்தில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.95 லட்சம் மதிப்பீட்டில் பழனிவேல் என்பவரது விவசாய நிலத்தில் பண்ணைக்குட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அலவாய்ப்பட்டி பஞ்சாயத்தில், ரூ.2.91 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தையும், பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மருதநாயகம் என்பவரது வீட்டின் கட்டுமானப்பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
சாலைப்பணிகள், நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளிட்ட ரூ.3.68கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை அமைச்சர் மதிவேந்தின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என்று அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார்.
ஆய்வின் போது, டிஆர்டிஏ திட்ட இயக்குனர் வடிவேல், செயற்பொறியாளர் குமார், வெண்ணந்தூர் ஒன்றியக்குழு தலைவர் தங்கம்மாள், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் துரைசாமி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் துரைசாமி, பிஆர்ஓ சீனிவாசன், பிடிஓக்கள் மாதவன், பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu