ராசிபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் - அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் பங்கேற்பு

ராசிபுரம் பகுதியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
ராசிபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பிள்ளாநல்லூர் டவுன் பஞ்சாயத்து செங்குந்தர் சமுதாய கூடம், வெண்ணந்தூர் டவுன் பஞ்சாயத்து மாரியம்மன் திருமண மண்டபம், அத்தனூர் டவுன் பஞ்சாயத்து சின்னபாவடி கலையரங்கம், பட்டணம் டவுன் பஞ்சாயத்து சமுதாய கூடம், ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்து கொங்கு சமுதாய கூடம் ஆகிய இடங்களில், பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்கள், சப்- கலெக்டர் கோட்டைக்குமார் தலைமையில் நடைபெற்றது.
நாமக்கல் எம்.பி. சின்ராஜ் முன்னிலை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, ரேசன் கார்டு, பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு வேண்டி 1,090-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை அமைச்சர் பெற்றுக்கொண்டார். மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில், வருவாய்த்துறையின் சார்பில் 80 பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகளையும், 32 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகையாக ரூ.8,000, இயற்கை மரண உதவித்தொகையாக ரூ.20,000, விபத்து மரண உதவித்தொகையாக ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.5.36 லட்சத்திற்கான காசோலைகளையும், வேளாண்மை துறையின் சார்பில் 9 விவசாயிகளுக்கு ரூ.3,150 மதிப்பிலான வேளாண் இடுபொருட்களையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 7 விவசாயிகளுக்கு ரூ.2.69 லட்சம் மதிப்பீட்டில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கான உத்தரவுகளையும் அமைச்சர் மதிவேந்தின் வழங்கினார்.
முகாம்களில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேலு, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மோகனசுந்தரம், பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu