இராசிபுரத்தில் வெளுத்து வாங்கிய மழை: வெள்ளம் தேங்கியதால் மக்கள் அவதி
இராசிபுரம் பகுதியில் பெய்த கனமழையால் ரோடுகளில் மழைநீர் குளம்போல் தேங்கி, டூ வீலர்களில் சென்றவர்கள் பாதிக்கப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள ராசிபுரம் நகரம், வெண்ணந்தூர், ஆர்.புதுப்பாளையம், நாமகிரிப்பேட்டை, பட்டணம், வடுகம், மெட்டாலா, ஆண்டகளூர்கேட், குருசாமிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. ராசிபுரம் வட்டாரத்தில் அதிகபட்சமாக 43 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ராசிபுரம் பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள கவரைத்தெரு, புதுப்பாளையம் ரோடு, லிங்கப்பத் தெரு, தேசாய் பெருமாள் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் மழைநீர் புகுந்து, குளம்போல் தேங்கியதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சில தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்கும் மழைவெள்ளம் புகுந்தது. ராசிபுரம் நகரில் பல இடங்களில், தண்ணீர் செல்லும் நீர்வழிப்பாதைகள் அடைக்கப்பட்டுள்ளதால், தெருக்களில் மழைநீர் புகுந்து பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறினர். நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்வழிப் பாதைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu