இராசிபுரம் பகுதியில் புதிய மின்மாற்றிகள்: அமைச்சர் துவக்கி வைப்பு

இராசிபுரம் பகுதியில் புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்களை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார். அருகில் எம்.பி. ராஜேஷ்குமார்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் தாலுக்கா, காட்டூர் பகுதியில் மின்சார வாரியத்தின் மூலம் ரூ.15.83 லட்சம் மதிப்பீட்டில் 63 கேவிஏ திறன் கொண்ட 2 புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் துவக்கவிழா ராஜேஷ்குமார் எம்.பி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு புதிய டிரான்ஸ்பார்மர்களை துவக்கி வைத்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் மதிவேந்தன், தமிழகம் முழுவதும் மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்கிடும் வகையில், தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுவருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்கிடும் வகையில் 41 புதிய டிரான்ஸ்பார்மர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மின் விநியோகத்தினை சீரமைக்கவும், தடையில்லா மின்சாரம் மற்றும் குறைவான மின்னழுத்தம் இல்லாமல் வழங்கிடவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இராசிபுரம் கோட்டத்தில் 1,16,578 மின் இணைப்புகள் உள்ளன. இவற்றில் 14,592 விவசாய மின் இணைப்புகளும், 10,410 வர்த்தக மின் இணைப்புகளும், 73,473 குடியிருப்பு மின் இணைப்புகளும், 5,792 தொழில் சார்ந்த மின் இணைப்புகளும் உள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. முதல்வர் அறிவித்துள்ளதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 1,00,000 புதிய விவசாய மின் இணைப்புகளை வழங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறினார்.
நிகழ்ச்சியில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ஜெகநாதன், சங்கர், அரங்கசாமி, ராஜம்மாள், இராசிபுரம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu