இராசிபுரம் அருகே நித்யானந்தாவின் பெண் சீடர்கள் ஓட ஓட விரட்டியடிப்பு

இராசிபுரம் அருகே நித்யானந்தாவின் பெண் சீடர்கள் ஓட ஓட விரட்டியடிப்பு
X

இராசிபுரம் அருகே காரில் வந்த நித்யானந்தாவின் பெண் சீடர்களை விரட்டியடிக்கும் பொதுமக்கள்.

இராசிபுரம் அருகே காரில் வந்த நித்யானந்தாவின் பெண் சீடர்களை பொதுமக்கள் ஓட ஓட விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகே உள்ள அய்யம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் வசிப்பவர் ராமசாமி (62). விவசாயி. இவர் அதே பகுதியில் மளிகை கடையும் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அத்தாயி (52), நித்யானந்தாவின் தீவிர பக்தை. இவர் கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு சென்று அங்கேயே தங்கிவிட்டார்.

இந்நிலையில், அத்தாயி ஆசிரமத்துக்கு செல்லும் முன்பு அவரது பெயரில் இருந்த வீடு மற்றும் கடையை அடமானம் வைத்து, பேங்க் ஒன்றில் ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் கடன் வாங்கி, பணத்தை தன்னுடன் ஆசிரமத்துக்கு எடுத்துச் சென்று விட்டார். கடனை திருப்பி செலுத்தாததால் பேங்க் மூலம் வீடு ஜப்திக்கு வந்துள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் கடனை திருப்பிச் செலுத்த முடிவு செய்தனர். பேங்க் நிர்வாகத்தினர் கடனைப்பெற்ற அத்தாயி கையெழுத்திட்டால் தான் கடனை முடிவுக்கு கொண்டுவந்து, பத்திரங்களை திருப்பிக்கொடுக்க முடியும் என்று தெரிவித்தனர்.

இதனால் அவர்கள் பெங்களூர் ஆசிரமத்தில் இருந்த அத்தாயியை பலமுறை அழைத்தும், அவர் திரும்ப வரவில்லை. மேலும் கடந்த 4 ஆண்டுகளாக அவர் தனது குடும்பத்தாருடன் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ளவில்லை. இதற்கிடையில், கடந்த ஒரு மாதமாக தனது மகன் பழனிசாமி, அவருடைய மகள் சஸ்மிதா ஆகியோருடன் அத்தாயி செல்போனில் பேசி வந்துள்ளார்.

மேலும் ஆசிரமத்தில் உள்ளவர்கள் தன்னை வெளியே விட மறுப்பதாகவும், நீங்கள் வந்து அழைத்து செல்லுங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில் திங்கள்கிழமை, காலை 11 மணிக்கு பெங்களூருவிலிருந்து ஒரு காரில் நித்யானந்தாவின் 2 பெண் சீடர்களுடன், அத்தாயி அய்யம்பாளையத்துக்கு வந்தார். இதையறிந்த அவருடைய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். அத்தாயி மற்றும் பெண் சீடர்கள் வந்த காரை அவர்கள் சூழ்ந்து கொண்டு அத்தாயியை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வலியுறுத்தினர்.

இதனால் நித்யானந்தாவின் பெண் சீடர்களுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே அங்கிருந்தவர்கள், அத்தாயியை தனியாக அழைத்துவந்து, மற்றொரு காரில் ஏற்றி அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். இதற்கு பெண் சீடர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர்களை விரட்டியடித்தனர். பயந்து போன 2 பெண் சீடர்களும் காரில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து, நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இராசிபுரம் அருகில் உள்ள பட்டணம், வடுகம், புதுப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மேலும் சில பெண்கள் பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவிப்பதாகவும், அவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil