நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து தப்பியது குறித்து இராசிபுரத்தில் பெண் சீடர் பரபரப்பு

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து தப்பியது குறித்து இராசிபுரத்தில் பெண் சீடர் பரபரப்பு
X

அத்தாயி, நித்யானந்தா சீடர்.

இராசிபுரத்தைச் சேர்ந்த, நித்தியானந்தாவின் பெண் சீடர் பெங்களூர் ஆசிரமத்தில் இருந்து தப்பி வந்தது குறித்து பரபரப்பாக பேசி வருகிறார்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகே அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, விவசாயி. இவர் அப்பகுதியில் மளிகைக்கடையும் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அத்தாயி ( 52). இவர், நித்தியானந்தாவின் தீவிர பக்தர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அத்தாயி வீட்டை விட்டு வெளியேறி, பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்துக்கு சென்று அங்கேயே தங்கிவிட்டார்.

அவரது உறவினர்கள் பலமுறை ஊருக்கு அழைத்தும் அவர் வீட்டுக்கு வர மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து அவருடைய கணவர், தன்னுடைய மனைவியை மீட்டுத்தரும்படி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பியிடம் புகார் மனு அளித்தார். அப்போதும் அவரை மீட்க முடியவில்லை.

இதற்கிடையே அத்தாயி பெயரில் இருந்த வீடு, கடனை திருப்பிச்செலுத்தாததால், வங்கி மூலம் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து அத்தாயிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், ஆசிரமத்தில் தன்னை வெளியே விட மறுக்கிறார்கள் என்று கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் அத்தாயினுடைய மகன் வழி பேத்தி செல்போனில் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். அப்போது அவரது மழலைப் பேச்சும், வீட்டுக்கு வரும்படி பாட்டியை கெஞ்சி கேட்டுக் கொண்டதும் அத்தாயிக்கு பேத்தியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. உடனே சொந்த ஊருக்கு திரும்பி வந்து பேத்தியை பார்க்க முடிவு செய்தார்.

அதற்காக தன்னுடன் 2 பெண் சீடர்களை அழைத்துக் கொண்டு இராசிபுரம் வந்தார். வந்த இடத்தில் அத்தாயியை மட்டும் மீட்டு விட்டு மற்ற 2 பெண் சீடர்களையும் அங்குள்ளவர்கள் விரட்டி அடித்துவிட்டனர். தற்போது அத்தாயி தன்னுடைய பேத்தி மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக உள்ளார். அவர், பெங்களூரில் இருந்து சொந்த ஊர் திரும்பியது குறித்து ஊர் மக்களிடம் பரபரப்பாக பேசி வருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!