இராசிபுரம் ரேசன் கடையில் பொருட்களை இறக்கிய கூலித்தொழிலாளி நெஞ்சு வலியால் உயிரிழந்தார்
ரேஷன் கடை மாதிரி படம்
இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டி மூலம் ரேசன் கடைகளுக்கு பொருட்களை லாரிகளில் கொண்டு சென்று விநியோகம் செய்யும் சுமை தூக்கும் தொழிலாளி நெஞ்சு வலியால் உயிரிழந்தார்.
இராசிபுரம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் குழந்தான் என்கிற செல்வராஜ் (52). அவர் ராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியின்கீழ் செயல்படும் ரேசன் கடைகளுக்கு லாரிகளில் அரிசி, பருப்பு, கோதுமை போன்ற உணவு பொருட்களை வினியோகம் செய்யும் சுமை தூக்கும் தொழிலாளியாக கடந்த 30 ஆண்டுகளாக தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று ரேசன் கடைகளுக்கு லாரியில் உணவு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. இதில் ராசிபுரம் அருகேயுள்ள பல்லவநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ரேசன் கடையில் லாரியில் இருந்து மூட்டைகளை இறக்கும் பணியில் செல்வராஜ் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தரையில் அமர்ந்த அவர், அப்படியே மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் முன்பு அவர் உயிரிழந்து விட்டார். அங்கு திரண்டு வந்த அவரது உறவினர்கள் ராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் கடந்த 30 ஆண்டுகளாக தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த செல்வராஜின் குடும்பத்திற்கு நிதியுதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இது குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu