ராசிபுரத்தில் மகளிர் குழுவினருக்கு ரூ.1.58 கோடி கடன் உதவி: அமைச்சர் மதிவேந்தன் வழங்கல்

ராசிபுரத்தில் மகளிர் குழுவினருக்கு ரூ.1.58 கோடி  கடன் உதவி: அமைச்சர் மதிவேந்தன் வழங்கல்
X

ராசிபுரத்தில் பட்டு விவசாயிகளுக்கு முழு மானியத்தில் பட்டு வளர்ப்பு உபகரணங்களை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். அருகில் கலெக்டர் ஸ்ரேயாசிங்.

ராசிபுரத்தில், மகளிர்குழுவினருக்கு ரூ.1.58 கோடி கடன் உதவியை, அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும், மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்குதல் மற்றும் பட்டுவளர்ச்சித் துறையின் சார்பில், பட்டு விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளர்ப்புத் தளவாடங்கள் வழங்கும் நிகழ்ச்சி, ராசிபுரத்தில், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்றது.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 36 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.58 கோடி கடனுதவிகளையும், 48 பட்டு விவசாயிகளுக்கு, ரூ.25.20 லட்சம் மதிப்பிலான பட்டுப்புழு வளர்ப்புத் தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்களையும் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் 2006-11ம் ஆண்டு காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது மாவட்டந்தோறும் நேரடியாகச் சென்று, ஆயிரக்கணக்கான மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு தன் கையாலேயே சுழல் நிதி, பொருளாதார கடனுதவிகளை வழங்கினார். தற்போது மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றவுடன் சாதாரண கட்டண அரசு டவுன் பஸ்களில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயனம் செய்யலாம் என்று அறிவித்துள்ளார். திமுக எப்போதும் மகளிர் முன்னேற்றத்திற்கு தேவையான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வருகிறது என்றார்.

நிகழ்ச்சியில் நன்கொடையாளர் ராஜேஷ்குமார், ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், பிஆர்ஓ சீனிவாசன், பட்டு வளர்ச்சித்துறை மண்டல துணை இயக்குநர் சந்திரசேகரன், உதவி இயக்குநர் முத்துப்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!