இராசிபுரம் நகாரட்சியில் திட்டப்பணிகளை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு
இராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன். அருகில் எம்.பி., ராஜேஷ்குமார்.
இராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில், ராசிபுரம் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் மற்றும் துப்புரவுப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. எம்.பி. ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, இராசிபுரம் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் துப்புரவு பணிகள், ரோடுகள் அமைக்கும் பணிகள், கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள், பள்ளி கட்டிடங்கள் கட்டும் பணிகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணி ஆகியவற்றின் பணி முன்னேற்றம் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பேசிய அவர், இராசிபுரம் சட்டசபைத் தொகுதியின், முக்கிய இடமாக ராசிபுரம் நகராட்சி விளங்குகின்றது. நகராட்சி பகுதியில் குடிநீர் வழங்கும் பணிகளை சீர்செய்தல், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைத்தல், வளர்ச்சித்திட்டப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவை மிக முக்கிய பணிகளாகும்.
இராசிபுரம் நகராட்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் கட்டிடம் கட்டும் பணிகளை துவக்க வேண்டும். நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள பாரதிதாசன் நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இந்த பணிகள் துவக்கப்படும்.
நகராட்சியில் உள்ள 66 கி.மீ தூரம் சாலைகளில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 41 இடங்களில் உள்ள 12.41 கி.மீ நீளத்திற்கு ரூ.12 கோடி மதிப்பீட்டில் தார்ச்சாலை மற்றும் சிமெண்ட் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகராட்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாதந்தோறும் மேற்கொள்ளப்படும்.
மேலும் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் விரைவில் நடத்தப்படும். மழைநீர் தேங்காமல் நகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
கூட்டத்தில் பிஆர்ஓ சீனிவாசன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவிதா ராணி, தாசில்தார் கார்த்திகேயன், நகராட்சி கமிஷனர் (பொ) கிருபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu