ராசிபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து தாய்- குழந்தை இருவரும் பலி

ராசிபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து தாய்- குழந்தை இருவரும் பலி
X
ராசிபுரம் அருகே, டேபிள் பேனை தொட்டதால், மின்சாரம் தாக்கிய குழந்தையை காப்பாற்ற முயன்ற தாய், குழந்தை இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டி கிராமம் அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் ராஜா (35). பி.காம் பட்டதாரி. அவரது மனைவ் பிரியா (28), இன்ஜினியர். இவர்களுக்கு வைஷ்யா (4) என்ற மகளும், ஒன்றரை வயதில் முகுந்தன் என்ற குழந்தையும் இருந்தனர்.

சம்பவத்தன்று ராஜா வேலைக்குச் சென்று விட்டார். மதியம் பிரியா, தனது குழந்தை முகுந்தனை விளையாட வைத்துவிட்டு, வீட்டை தண்ணீரால் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது விளையாடி கொண்டிருந்த குழந்தை முகுந்தன், அருகில் இருந்த டேபிள் பேனை தொட்டான். இதனால் திடீரென குழந்தையை மின்சாரம் தாக்கியது. மின்சார ஷாக்கால் துடித்த குழந்தையை பார்த்து, தாய் பிரியா அலறினார். உடனடியாக குழந்தையை காப்பாற்றும் நோக்கில், விரைந்து சென்று தூக்கினார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் பிரியாவும், குழந்தை முகுந்தனும் துடிதுடித்து அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது, இருவரும் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வீட்டின் மின் இணைப்பை துண்டித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மின்சாரம் தாக்கி பலியான தாய், குழந்தையின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் நாமக்கல் சப் கலெக்டர் கோட்டைகுமாரும் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!