ராசிபுரம்: காரில் மண்ணுளி பாம்பு கடத்தல் - 3 பேர் கைது

ராசிபுரம்: காரில் மண்ணுளி பாம்பு கடத்தல் - 3 பேர் கைது
X
ராசிபுரம் அருகே காரில் மண்ணுளி பாம்பை கடத்தி வந்த கன்னியாகுமரியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராசிபுரத்தை அடுத்த கீரனூர் தேசிய நெடுஞ்சாலையில், நாமக்கல் மாவட்ட எல்லையில் போலீஸ் சார்பில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதில், அவ்வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட கார் ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காரில் வந்த 3 பேர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த காரை முழுமையாக சோதனையிட்டனர். காரில் 2 சாக்கு மூட்டைகளில் சுமார் 4 அடி நீளமும், 5 கிலோ எடையும் கொண்ட, 2 மண்ணுளிப் பாம்புகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அப்போது தப்பியோட முயன்ற 3 பேரையும் வெண்ணந்தூர் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர்.

காரில் வந்த மூவரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் (49), ஆல்பின் (48), வில்பிரின் (36) என்பது தெரிய வந்தது. 3 பேரிடமும் போலீசார் விசாரணை செய்ததில், அவர்கள் மூவரும் மண்ணுளி பாம்பை ராயவேலூரில் இருந்து கன்னியாகுமரிக்கு கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

நாமக்கல் மாவட்ட வனத்துறை அலுவலர் ராஜாங்கம், ராசிபுரம் வனச்சரகர் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சம்மந்தப்பட்ட மற்ற நபர்களை பிடிப்பதற்காக வனத்துறையினர் கன்னியாகுமரிக்கு செல்ல உள்ளதாக தெரிகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!