நாமக்கல்: 3 ஊராட்சி ஒன்றியங்களில் சராசரியைவிட அதிக குழந்தை பிறப்பு
நாமகிரிப்பேட்டையில் நடைபெற்ற குழந்தை பிறப்பை கட்டுப்படுத்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்ப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அதிக குழந்தை பிறப்பை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார நர்சுகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டகலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, எருமப்பட்டி ஆகிய 3 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தமிழ்நாட்டின் சராசாரியை விட, அதிகமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலை பெண்களிடம் உள்ளது. தற்போதும் கொல்லிமலைப்பகுதிகளில் அதிகபட்சமாக 5 குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களும், நாமகிரிப்பேட்டை பகுதியில் 4 குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் உள்ளது வருத்தப்படக் கூடியதாக உள்ளது.
அதிக குழந்தைபேறின் காரணமாக, சம்மந்தப்பட்ட பெண்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதுடன், குழந்தைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படுகின்றது. அதிக குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்கள் சரியான உணவுமுறைகளை பின்பற்றாதது, சத்தான உணவுகளை உட்கொள்ளாதது ஆகிய காரணங்களால் தாய்மார்களின் எடை குறைவு, ரத்தசோகை நோய் ஆகியவற்றால் உடல்நிலை பாதிக்கப்படுவதுடன், வயிற்றில் உள்ள சிசுவும் சத்துக்குறைவினால் பாதிக்கப்படுகிறது.
இதனை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் 3 ஊராட்சி ஒன்றியப்பகுதிகளிலும் அதிக குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள், அவர்களது கணவர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த நிலையை முற்றிலும் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை உயர் வரிசை பிறப்பு இல்லாத, சுகாதாரத்தில் சிறந்த மாவட்டமாக உருவாக்க கிராம நர்சுகள் மற்றும் குடும்ப நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஜெயந்தி, நாமகிரிப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் தயாள்சங்கர், மகப்பேறு டாக்டர் செல்வாம்பிகை, மாவட்ட தாய் சேய் நல அலுவலர் தேவி, பிஆர்ஓ சீனிவசான் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu