ராசிபுரத்தில் அரசு அலுவலர்களுக்கு அடிப்படை பயிற்சி: 340 பேர் பங்கேற்பு

ராசிபுரத்தில் அரசு அலுவலர்களுக்கு அடிப்படை பயிற்சி: 340 பேர் பங்கேற்பு
X

இராசிபுரத்தில் நடைபெற்ற அரசு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு துவக்க விழாவில், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் கையேடுகளை வழங்கினார்.

பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தின் சார்பில், அரசு அலுவலர்களுக்கான அடிப்படைப் பயிற்சி வகுப்பு துவக்க விழா.

இராசிபுரத்தில் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தின் சார்பில், அரசு அலுவலர்களுக்கான அடிப்படைப் பயிற்சி வகுப்பு துவக்க விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்துப் பேசியதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு தேவையான பயிற்சி வகுப்புகள், பவானிசாகர் பயிற்சி மையத்தில் நடைபெற்று வந்தது. அங்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பணியாளர்கள் தங்கி பயிற்சி பெற்று வந்தனர். அதிக பணியாளர்களுக்கு அங்கு பயிற்சி வழங்க முடியாத சூழ்நிலையின் காரணமாக பணியாளர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் குறித்த காலத்தில் கிடைக்காத சூழல் நிலவி வந்தது.

இதனை போக்கும் வகையில் தற்போது தமிழ்நாடு அரசு, புதிதாக அரசுப்பணியில் சேரும் பணியாளர்கள், பதவி உயர்வு பெறும் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அடிப்படைப் பயிற்சி பவானிசாகரில் மட்டுமல்லாமல் அரசு அலுவலர்கள் பணிபுரியும் அந்தந்த மாவட்டங்களில் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிதாக பணியில் சேருபவர்களுக்கு, அந்தந்த மாவட்டங்களிலேயே ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலரை ஒருங்கிணைப்பாளராகவும், ஓய்வு பெற்ற சப் கலெக்டர்கள், கணக்கு அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்களை பயிற்றுநர்களாகவும் நியமித்து பயிற்சி வழங்கப்படுகிறது.

நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் 340 அரசு அலுவலர்களுக்கு அலுவலர்களுக்கான அடிப்படைப் பயிற்சி 37 வேலை நாட்கள் நடைபெறுகிறது. இதில் அலுவலக நடைமுறைகள், பணி நடைமுறைகள், பொதுமக்கள் தொடர்பு, அரசு அலுவலக கணக்கு பயிற்சி, ஊரக வளர்ச்சித்துறை திட்டங்கள், தகவல் உரிமைச் சட்டம், கம்ப்யூட்டர் பயன்பாடு உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சிகளை பெறுவதன் மூலமாக பொதுமக்களுக்கு தங்கள் துறையின் மூலம் தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அரசின் திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்டவற்றில் தங்களது பங்களிப்பை உணர்ந்து அரசு பணியில் செம்மையாக பணிபுரிய வேண்டும் என்றார். அரசு அலுவலர் பயிற்சி நிலைய முதல்வர் சாதனைக்குறள், ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், நாமக்கல் தாசில்தார் திருமுருகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்