வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு 2.31 லட்சம் மரக்கன்றுகள்
நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகளை கலெக்டர் ஸ்ரேயாசிங், ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார், நாமக்கல் எம்.பி சின்ராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், உழவர் நலத்துறையின் சார்பில், தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கத்தின், புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதற்கட்டமாக 20 விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், ராஜ்யசபா எம்.பி ராஜேஸ்குமார், நாமக்கல் எம்.பி சின்ராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் , நாமக்கல் மாவட்டத்தில் 33 சதவிகிதம் வனப்பகுதியாக உருவாக்க வேண்டும். ஆனால் தற்போது 15 சதவிகிதம் மட்டுமே வனப்பரப்பு உள்ளது. விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் பயிர் செய்யாத மற்றும் சீமைகருவேல் மரங்கள் வளார்துள்ள இடங்களில் புதிய வேளாண் காடு வளர்ப்புத்திட்டத்தின் மூலம் மரங்களை நட்டு பயன்பெற வேண்டும். இதன் காரணமாக மழை நீர் மரங்களின் வழியாக நிலத்திற்குள் சேகரிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 2021- 2022 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு மொத்தம் 2,31,200 மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு அரசு வனத்துறையின் நாற்றங்கால்களில் தலா ரூ.15 மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இம்மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களின் வரப்புகளிலோ அல்லது குறைந்த செறிவில் விவசாய நிலங்களிலோ நடவு செய்யலாம். வரப்பில் நடவு செய்வதாக இருந்தால், ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலங்களில் குறைந்த செறிவில் நடவு செய்வதாக இருந்தால் ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளுக்கு மிகாமலும் வழங்கப்படும்.
மேலும், நடவு செய்த 2-ஆம் ஆண்டு முதல் 4-ஆம் ஆண்டு வரை நல்ல முறையில் பராமரிக்கப்படும் மரக்கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7 வீதம், மூன்று ஆண்டுகளுக்கு ரூ.21 ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இம்மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து அறுவடை செய்யும் போது வனத்துறையின் அனுமதியை விவசாயிகள் எளிதில் பெறும் வகையில் நடவு செய்த மரக்கன்றுகள் அனைத்தும் வருவாய்த்துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யப்படும்.
இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் அவரவர் பகுதி வேளாண்மை விரிவாக்க மையத்திலோ அல்லது, உழவன் ஆப் மூலமோ தங்கள் பெயரை பதிவு செய்து தேவையான மரக்கன்றுகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, வேளாண்மை இணை இயக்குநர் அசோகன், துணை இயக்குநர் ஜெகதீசன், உதவி இயக்குநர்கள் சித்திரைச்செல்வி, யுவராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu