பள்ளிப்பாளையத்தில் மழை, காவிரி ரயில்வே சுரங்கத்தில் நீர்தேக்கம்

பள்ளிப்பாளையத்தில் மழை, காவிரி ரயில்வே சுரங்கத்தில் நீர்தேக்கம்
X
பள்ளிப்பாளையத்தில் மழை, பள்ளிப்பாளையம் பகுதிகளில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி

பள்ளிப்பாளையத்தில் வெளுத்து வாங்கிய மழை - பொதுமக்கள் நிம்மதிப் பெருமூச்சு

பள்ளிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 4:30 மணிக்குத் தொடங்கிய மழை அரை மணி நேரம் வெளுத்துக் கட்டியது. கடுமையான வெயிலுக்குப் பிறகு பெய்த இந்த மழையால், சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. காவிரி பகுதியில் அமைந்துள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் விரைந்து வந்து, மின் மோட்டார் மூலம் தேங்கிய மழைநீரை உறிஞ்சி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல், ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான புதுப்பாளையம், பட்டணம், நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, காக்காவேரி, புதுப்பட்டி, மெட்டாலா, மங்களபுரம், குருசாமி பாளையம், வெண்ணந்தூர், மின்னக்கல், ஓ.சவுதாபுரம், அத்தனூர், ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை, ப.வேலூர், பரமத்தி, பொத்தனூர், கபிலர்மலை, பாண்டமங்கலம் பகுதிகளிலும் மழை பெய்தது. நீண்ட காலமாக வறண்டு கிடந்த நிலங்கள் இந்த மழையால் குளிர்ச்சியடைந்தன.

கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், எதிர்பாராத வகையில் பெய்த இந்த மழை விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது. குறிப்பாக விவசாயிகள் மத்தியில் இந்த மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வெப்பத்தின் தாக்கம் குறைந்து, சுற்றுப்புறம் குளிர்ச்சியடைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். இந்த திடீர் மழை கோடை வெப்பத்திலிருந்து தற்காலிக நிவாரணத்தை அளித்திருந்தாலும், விவசாயத்திற்குத் தேவையான அளவு மழை பெய்யவில்லை என்பதால் தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

Tags

Next Story