வெள்ளை சுருள் ஈ தாக்குதலால் தென்னை மகசூல் குறைவு

தென்னையில் வெள்ளை சுருள் ஈ தாக்குதல்: வேளாண் விஞ்ஞானிகள் கள ஆய்வு
நாமகிரிப்பேட்டை அடுத்த கார்கூடல்பட்டி கிராமத்தில் தென்னை பயிரில் பரவலாக வெள்ளை சுருள் ஈ தாக்குதல் காணப்படுவதை அடுத்து, விவசாயிகள் அடிக்கடி கூறிவந்த புகார்களின் அடிப்படையில் நாமகிரிப்பேட்டை வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் வெள்ளை சுருள் ஈக்களை கட்டுப்படுத்துவது குறித்து நேரடியாக விவசாய வயல்களுக்குச் சென்று செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய ஓய்வு பெற்ற விஞ்ஞானி ராஜமாணிக்கம் தென்னை ரகங்கள், தென்னையில் ஒருங்கிணைந்த முறையில் பூச்சி கட்டுப்பாடு குறித்து விளக்கமளித்தார். அவர் குறிப்பிட்டதாவது, தென்னை பயிரை தாக்கிய வெள்ளை சுருள் ஈ பூச்சியின் தாக்குதல் அறிகுறியாக தென்னை ஓலைகளில் வெள்ளை படர்ந்தது போல் தோன்றி, கருப்பு நிறமாக மாறி இலைகளில் பசை போன்று ஒட்டிக்கொள்வதால் மகசூல் குறைவு ஏற்படும் என்றும், மரத்தில் ஆறு அடி உயரத்தில் ஏக்கருக்கு எட்டு இடங்களில் மஞ்சள் ஒட்டு பொறியில் விளக்கெண்ணெய் தடவி மரத்தைச் சுற்றி கட்டி வைத்து அந்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என்றும் கூறினார். இதனால் பூச்சிகளின் இனப்பெருக்கம் தடைசெய்யப்பட்டு பாதிப்பு கட்டுப்படுத்தப்படும் என விளக்கினார். முட்டை ஒட்டுண்ணியான என்காசியா, கிரைசோபெர்ளா என்ற முட்டை ஒட்டுண்ணிகளை ஒரு ஹெக்டேருக்கு 1,000 முட்டைகள் என்றளவில் தென்னை மட்டையில் கட்டி விட வேண்டும் என்றும், இதன் மூலம் வெள்ளை சுருள் ஈ பூச்சிகளின் முட்டைகளை உண்ணுதல் மற்றும் இளம் புழுக்களை தின்றும் வெள்ளை சுருள் ஈ தாக்குதல் பெருமளவில் கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் விளக்கினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் வித்யபாரதி, தோட்டக்கலைத்துறை மூலம் தென்னை பயிரில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணை தோட்டக்கலை அலுவலர் வடிவேல் முருகன், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் கோபால், வெற்றிவேல், சொக்கலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu