பரமத்தியில் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கல்
பரமத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
பரமத்தி இலங்கை தமிழர் முகாமில் ரூ.31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 408 குடும்பங்களை சேர்ந்த 1,261 இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை வகித்தார். எம்.பி.க்கள் ராஜேஷ்குமார், சின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இலங்கை தமிழர்களுக்கு ரூ.19 லட்சத்து 88 ஆயிரத்து 675 மதிப்பிலான துணிகள், பாத்திரங்கள், 13 குடும்பங்களுக்கு ரூ.47 ஆயிரத்து 411 மதிப்பில் விலையில்லா சமையல் கேஸ் இணைப்பு ஆகியவற்றை வழங்கினார். மேலும் 9 மகளிர் குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் உள்பட ரூ.31 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, திருச்செங்கோடு சப் கலெக்டர் இளவரசி, பரமத்திவேலூர் தாசில்தார் அப்பன்ராஜ், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனி தாசில்தார் சுந்தரவல்லி, முன்னாள் எம்.எல்.ஏ மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu