திருப்பணியின்போது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நந்தி சிலை கண்டுபிடிப்பு

திருப்பணியின்போது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நந்தி சிலை கண்டுபிடிப்பு
X

மோகனூர் அருகே கிடைத்த பழங்கால நந்தி சிலை

மோகனூர் அருகே கோயில் திருப்பணியின்போது ஆயிரம் ஆண்டுகள் பழமையான நந்தி சிலை கிடைத்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகில் உள்ள ஆரியூரில், அருள்மிகு செல்லாண்டியம்மன் மற்றும் பாண்டீஸ்வரர் கோயில்கள் உள்ளன. பாண்டீஸ்வரர் கோயில் பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த போது கட்டப்பட்ட பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கோயிலில் பாண்டீஸ்வரர், வேதநாயகி அம்மன், ஆறு முகங்களை கொண்ட முருக கடவுள் சிலைகள் இருந்ததாகவும், அதை பக்தர்கள் வழிபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் கால மாற்றத்தினால், அங்கிருந்து வேதநாயகி மற்றும் முருகன் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. அதன்பிறகு அந்த சிலைகள் அமைக்கப்படவில்லை.

இந்த கோவிலுக்கு அருகில் உள்ள செல்லாண்டியம்மன் கோயிலில் தற்போது திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. சுற்றுச்சுவர் கட்டுவதற்காக தொழிலாளர்கள் பாண்டீஸ்வரர் கோவில் முன்பு மண்ணை தோண்டினார்கள். அப்போது மண்ணில் புதைந்த நிலையில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான நந்தி சிலை ஒன்று சேதமடைந்த நிலையில் இருந்ததை பார்த்து கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கோயில் நிர்வாகத்தினர் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து ஆரியூரை சேர்ந்த பழனியப்பன் மற்றும் தோப்பூரை சேர்ந்த டாக்டர் சந்திரன் ஆகியோர் கூறுகையில், மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் நமது நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் என்பதால் இதற்கு பாண்டீஸ்வரர் என பெயர் வந்திருக்கலாம். பாண்டிய மன்னர்களுக்கு பின்னர் ஆட்சி செய்த முகலாய மன்னர்கள் காலத்தில் இந்து கோயில்களையும், அதில் உள்ள சிலைகளையும் சேதப்படுத்தியும், அழித்தும் அப்புறப்படுத்தி இருக்கலாம். மேலும் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் வளாகத்தில் வெள்ளை கற்களால் ஆன விநாயகர் சிலையும், பெரிய நந்தி சிலையும் சேதம் அடைந்த நிலையில் இருந்தன. அதை சேலம் தொல்லியல் துறையினர் ஆராய்ச்சிக்காக எடுத்துச் சென்று, சேலம் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். தற்போது கிடைத்த இந்த சிலையும், சேதமடைந்து இருப்பதால், இதுவும் பாண்டீஸ்வரர் கோயில் சிலையாக இருக்கும் என்று கூறினார்கள்.

செல்லாண்டியம்மன் கோயில் திருப்பணி நடைபெறும் நிலையில், கோயில் வளாகத்தில் மிகவும் பழமையான நந்தி சிலை கண்டுபிடிக்கப்பட்டது பக்தர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில், பாண்டீஸ்வரர் கோயிலில் திருப்பணி மேற்கொண்டு அனைத்து சுவாமி சிலைகளையும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் ஆரியூர் பகுதியில் தொல்லியல் துறையினர் முழுமையாக ஆய்வு நடத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil