பரமத்திவேலூரில் ஊரடங்கை மீறிய டீக்கடை, மளிகைக் கடைக்கு சீல்-அபராதம்!

பரமத்திவேலூரில் ஊரடங்கை மீறிய  டீக்கடை, மளிகைக் கடைக்கு சீல்-அபராதம்!
X

ப.வேலூரில் ஊரடங்கை மீறி  செயல்பட்ட மளிகைக் கடைக்கு போலீசார் சீல் வைத்த காட்சி.

பரமத்திவேலூரில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய டீக்கடை, மளிகைக்கடைகளுக்கு சீல் வைத்து அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே மருந்து கடைகள், ஆஸ்பத்திரிகள், பால் விற்பனை தவிர மற்ற அனைத்து கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மருத்துவ தேவை தவிர பிற காரணங்களுக்கு வெளியே செல்லவும் தடை விதித்துள்ளது.

இந்தநிலையில் பரமத்திவேலூர் சந்தைப்பேட்டை பகுதியில் டிஎஸ்பி ராஜா ரனவீரன், இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட 2 மளிகை கடைகளுக்கு போலீசார் சீல் வைத்து ரூ.10,000 அபராதம் விதித்தனர்.

மேலும், பாலப்பட்டியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி 3 டீக்கடைகள் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு ஓட்டலில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வாடிக்கையாளர்களுக்கு உணவுகள் வினியோகிக்கப்பட்டதும் தெரிந்தது. இதையடுத்து 3 டீக்கடைகள், ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் 4 கடைகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் போலீசார் அபராதம் விதித்தனர்.

இதனிடையே பரமத்தி, பாலப்பட்டி, ஜேடர்பாளையம், பரமத்திவேலூர் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதன்படி 40-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், வரும் காலங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!