பரமத்தி வேலூர் அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகில் உள்ள, பாண்டமங்கலம், தேவேந்திரகுல வேளாளர் தெருவில் குப்பன் என்கிற பரமசிவம் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். கணவன் மனைவி இருவரும் ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.
ஆடுகளைப் பராமரிப்பதற்காக வீட்டிற்கு அருகில் கொட்டகை அமைத்துள்ளனர். மின்வாரிய அனுமதியின்றி அந்த கொட்டகையில், அவர்கள் மின்சார இணைப்பு கொடுத்து மின்விளக்கு அமைத்துள்ளனர். இன்று 22ம் தேதி காலை 7.30 மணியளவில் பரமசிவம் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் இருவரும் ஆட்டுக்கு தீவனம் அளிப்பதற்காக ஆட்டுக்கொட்டகைக்கு சென்றுள்ளனர். அப்போது கொட்டகையின் முன்புறம் மின்சார வயர் அறுந்து கிடந்துள்ளது. அதை கவனிக்காமல் வயர்மீது இருவரும் கால் வைத்தனர். அப்போது அவர்களின் உடலில் மின்சாரம் பாய்ந்து, ஷாக் ஏற்பட்டு இருவரும் மயங்கி விழுந்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தனர். மின்வாரிய ஊழியர்கள் அங்கு வந்து மின் இணைப்பை துண்டித்தனர். தகவல் கிடைத்ததும் பரமத்திவேலூர் போலீசார் அங்கு வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu