நாமக்கல் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு: 16,201 குழந்தைகளுக்கு தொடர் சிகிச்சை

நாமக்கல் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு: 16,201 குழந்தைகளுக்கு தொடர் சிகிச்சை
X

கபிலர்மலையில் நடைபெற்ற, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்த, ஆலோசனைக் கூட்டத்தில், கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.

நாமக்கல் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள 16,201 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, தமிழ்நாட்டில் உள்ள 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில், வயதிற்கேற்ற எடையின்மை, உயரமின்மை மற்றும் மெலிவுத் தன்மை ஆகிய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியினை மேம்படுத்த ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மூலம், சுமார் 37 லட்சம் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு வளர்ச்சிக் கண்காணிப்பு இயக்கம் நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் 16,201 குழந்தைகள் வயதிற்கேற்ற எடையின்மை, உயரமின்மை மற்றும் மெலிவுத் தன்மை ஆகிய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சுகாதாரத்துறையுடன் இணைந்து கடந்த மே.24ம் தேதி முதல் 1 மாதத்திற்கு குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்களில் நடைபெற்ற சிகிச்சைகள் குறித்து டாக்டர்களுடன் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பபடுவது குறித்தும், ஊட்டச்சத்து உதவித்தேவைப்படும் குழந்தைகளை தனித்தனியாக கண்டறிந்து குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு நீக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.

ஆய்வின்போது, ஒருங்கிணைந்த வட்டார குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரபா, கபிலர்மலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் காயத்திரி உட்பட்ட டாக்டர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!