பரமத்திவேலூரில் கத்திக்குத்தால் மறியல்: போக்குவரத்து பாதிப்பு
கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி, பரமத்திவேலூர் பஸ் நிலையம் முன்புறம், திரளான பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுக்கா உழவர்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (50). இவருடைய மகன் ஜீவா (24). அதே ஊரை சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள். சம்பவத்தன்று 3 பேரும் வேலைக்கு சென்று விட்டு நன்செய் இடையாறில் இருந்து உழவர்பட்டிக்கு செல்ல, பரமத்திவேலூர் அருகே உள்ள பொய்யேரி பகுதிக்கு வந்தனர்.
அப்போது அங்கு ரோட்டில் நின்றுகொண்டிருந்த, நன்செய் இடையாறை சேர்ந்த 4 பேருக்கும், முருகேசன், ஜீவா மற்றும் மணிகண்டன் ஆகியோருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது நன்செய் இடையாறைச் சேர்ந்த 4 பேரும் சேர்ந்து முருகேசன், ஜீவா மற்றும் மணிகண்டன் ஆகியோரை கோழி சண்டைக்கு பயன்படுத்தும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதில் காயம் அடைந்த 3 பேரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த நிலையில் காயமடைந்தவர்களின் கிராமமான உழவர்பட்டியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ப.வேலூர் காமராஜர் சிலை அருகே கூடிநின்று, நன்செய் இடையாறை சேர்ந்த 4 பேரையும் உடனடியாக கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர். பின்னர் பஸ் நிலைய நுழைவு வாயிலை அடைத்தபடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்திவேலூர் தாசில்தார் கண்ணன், வேலூர் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், பரமத்தி இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் கூட்டத்தில் ஒரு பிரிவினர், சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலம் அருகே சென்று அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம், கத்தியால் குத்தியதாக கூறப்படும் நன்செய் இடையாறைச் சேர்ந்த 4 பேரையும் கைது செய்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனால் சமாதானம் அடைந்த உழவர்பட்டி பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பரமத்தி வேலூர் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu