கபிலர்மலை வட்டாரத்தில் தரிசை விளைநிலங்களாக மாற்ற அரசு மானியம்: வேளாண்துறை
இது குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பரமத்திவேலூர் தாலுக்கா, கபிலர்மலை வட்டாரத்தில் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில் 2021-22ஆம் ஆண்டிற்கு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நீண்டகால தரிசு நிலங்களை பயன்படுத்தி சாகுபடிக்கு ஏற்ற விளை நிலங்களாக மாற்றி சாகுபடி செய்ய தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
கபிலர்மலை வட்டாரத்தில் கடந்த 5 ஆண்டுகளாக சாகுபடி செய்யப்படாமல் தரிசாக உள்ள நீண்ட கால தரிசு நிலங்கள் கண்டறியப்பட உள்ளன. இதனை சாகுபடிக்கு கொண்டு வருவதற்காக ஒரு தொகுப்பிற்கு 25 ஏக்கர் தரிசு நிலம் இருக்க வேண்டும். இதன்படி 2 தொகுப்புகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு (20 ஹெக்டேர்) தற்போது தொகுப்பு கிராமங்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பங்கு பெறும் விவசாயிகள் தங்களது நிலங்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் முட்புதர்களை அகற்றுதல், அகற்றப்பட்ட முட்புதர்களை அப்புறப்படுத்தி நிலத்தை சுத்தப்படுத்துதல் மற்றும் சமப்படுத்துதல், இருமுறை உழவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை விவசாயிகள் செய்து கொள்ள வேண்டும்.
உழுத நிலங்களில் தொழு உரம் இடுதல், வேலையாட்களின் கூலி மற்றும் சிறு தானியப் பயிர்கள் (சோளம்) விதைப்பு செய்தல் போன்ற பணிகளும் இடம்பெறும். எனவே கபிலர்மலை வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த அரிய வாயப்பினை பயன்படுத்திக் கொண்டு நமது நாட்டின் உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கு உறுதுணையாக இருப்பதோடு தங்களின் வாழ்வாதாரத்தினை இதன் மூலம் உயர்த்திக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி துணை வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu