பரமத்திவேலூரில் மீண்டும் வாழைத்தார் ஏலச்சந்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை

பரமத்திவேலூரில் மீண்டும் வாழைத்தார் ஏலச்சந்தை  திறக்க விவசாயிகள் கோரிக்கை
X

பரமத்திவேலூர் பகுதியில் ஏலச்சந்தை மூடப்பட்டுள்ளதால் ரோடு ஓரங்களில் விவசாயிகள் வாழைத்தார்களை வைத்து விற்பனை செய்கின்றனர்.

பரமத்திவேலூரில் வாழைத்தார் ஏலச்சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர், பாலப்பட்டி, நன்செய்இடையாறு, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், வெங்கரை, பொத்தனூர், குச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். பரமத்திவேலூரிலும், மோகனூரிலும் தினசரி நடைபெறும் வாழைத்தார் ஏலச்சந்தையில் விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்த வாழைத்தார்களை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். வெளியூர்களில் வரும் வியாபாரிகள் வாழைத்தார்களை கொள்முதல் செய்து எடுத்துச்செல்வார்கள்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்போது, வாழைத்தார்களை ஏலம் விடுவதற்கென தனியாக வேலூர் பழைய பை-பாஸ் ரோட்டில் செல்லாண்டியம்மன் கோவில் அருகே இடமாற்றம் செய்யப்பட்டது. கொரோனா 2வது அலையால் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அந்த இடத்திலும் வாழைத்தார் ஏலம் ரத்து செய்யப்பட்டது. இதனால் வாழைத்தார்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காவிரிக்கரையோரம் உள்ள பகுதிகளில் வாழைத்தார் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தங்கள் வயல்களில் வாழைத்தார்களை அறுவடை செய்ய முடியா த நிலையில், மரத்திலேயே பழுத்து வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் வாழைத்தார் ஏல சந்தையை திறக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாழை விவசாயிகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!