பரமத்தி அருகே டூ வீலர்கள் மோதி விபத்து: புது மாப்பிள்ளை உயிரிழப்பு
பரமத்திவேலூர் தாலுக்கா கபிலர்மலை அருகே உள்ள, கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் விக்னேஷ் (26). இவருக்கும் ஜமுனாதேவி என்பவருக்கும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் 2 பேரும் பரமத்தி அருகே பிள்ளைகளத்தூரில் வசித்து வந்தனர். பரமத்தி அருகே ஒரு தனியார் நூற்பாலையில் விக்னேஷ் மேற்பார்வையாளராகவும், ஜமுனாதேவி பணியாளராகவும் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த மாதம் 28-ந் தேதி இரவு கணவன், மனைவி இருவரும், வேலைக்கு செல்வதற்காக பரமத்தி அருகே நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் டூ வீலரில் சென்றுகொண்டிருந்தூதனர். அப்போது எதிரே திருச்சி மாவட்டம் கொளக்குடியை சேர்ந்த ஆனந்தன் (46) மற்றொரு டூ வீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, 2 டூ வீலர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் விக்னேஷ், ஆனந்தன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ஜமுனாதேவி லேசான காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற விக்னேஷ் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu