நாமக்கல் மாவட்டத்தில் 50 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தவில்லை: கலெக்டர் கவலை
நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கலெக்டர் ஸ்ரேயாசிங்.
நாமக்ககல் மாவட்டத்தில் உள்ள 50 சதவீதம் பேர் இன்னும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும் நாளை நடைபெறும் மெகா முகாமில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாமக்கல் மாவட்டத்தில் நாளை 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இது வரை 18 வயதுக்கும் மேற்பட்ட 7,16,663 பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 1,81,543 பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் போட்டு உள்ளனர்.
மாவட்டத்தில் 50 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் 50 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியே போடாமல் உள்ளனர். இது கவலை அளிப்பதாக உள்ளது. தடுப்பூசி போடாதவர்களை கண்டறிய குழுக்கள் அமைக்கப்பட்டு, வீடு வீடாகச் சென்று விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டால் 97 சதவீதம் பேருக்கு தொற்றால் இறப்பு ஏற்படாது என கூறப்படுகிறது. எனவே உயிரைக் காப்பாற்ற தடுப்பூசி மிக முக்கியமானதாக உள்ளது. தமிழக அரசு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தி வருகிறது.
அனைத்துப் பொதுமக்களும் அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். இதற்காக 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் மாவட்டத்தில் 700 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. முகாம்களில் 1 லட்சம் பேருக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் எந்த பத்தியத்தையும் பின்பற்ற தேவையில்லை.
முகாம்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை அரை மணி நேரம் கண்காணிப்பில் இருந்தாலே போதும், பின்னர் அவர்கள் வழக்கமாக பணிகளை செய்யலாம். பத்தியம் இருக்கத்தேவையில்லை, விரும்பும் உணவு வகைகளை சாப்பபிடலாம். கொரோனா தொற்று பரவலைத் தடுக்க வீட்டை விட்டு வெளியே செல்லும் அனைவரும் தவறாமல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.
பேட்டியின்போது டிஆர்ஓ., துர்காமூர்த்தி, பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பிரபாகரன், திட்ட இயக்குனர் வடிவேலு, பிஆர்ஓ., சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu