அத்தியாவசிய பணிக்கு நிதி இல்லை, அமைச்சரின் நிகழ்ச்சிக்கு 7 லட்சம்

தாரமங்கலம் நகராட்சி கூட்டம் நேற்று திமுக நகராட்சி தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு முன் காலை 11:30 மணிக்கு 8வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் ஜெயந்தி, "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை" என்ற வாசகம் அடங்கிய பதாகையுடன் கூட்ட அரங்கம் முன் காலி குடத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார். கமிஷனர் காஞ்சனா உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர் கூட்ட அரங்கிற்குள் சென்றார். அதேபோல் அதிமுக கவுன்சிலர் ருக்மணி தனது வார்டில் வாத்தியார் தோட்டம் பகுதியில் குடிநீர் முறையாக வரவில்லை என 2 அடி குடிநீர் குழாயைக் காட்டி முறையிட்டார். பாமக கவுன்சிலர் தனபால், 36 வீடுகளில் சீராக குடிநீர் வராததை சுட்டிக்காட்டி, "அத்தியாவசிய பணி செய்ய நகராட்சியில் நிதி இல்லை என கூறும் நிர்வாகம், அமைச்சர்கள் நிகழ்ச்சிக்கு மட்டும் 7 லட்சம் ரூபாய் செலவு செய்கிறது" என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு தலைவர் குணசேகரன், "அமைச்சர் நிகழ்ச்சிக்கு செலவு செய்வதைப் பற்றி பேசாதீர்கள், தேவையானதை கேளுங்கள்" என பதிலளித்தார். மேலும் ஒவ்வொரு மாத வரவு, செலவு கணக்குகளை கூட்டத்தில் தெரியப்படுத்த வேண்டும் என தனபால் கோரினார். இதையடுத்து மதியம் 12:30 மணிக்கு கூட்டம் தொடங்கி, தலைவர் குணசேகரன் நகராட்சியில் உயர்நிலைப்பள்ளி இல்லாததால் ஜலகண்டாபுரம் சாலையில் நூற்றாண்டு விழா கண்ட நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கைலாசநாதர் கோவில் அருகே பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள துவக்கப்பள்ளி கட்டடத்தை அகற்றி அங்கு புதிய பள்ளி கட்டடம் கட்ட கல்வித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு அனைத்து கவுன்சிலர்களும் வரவேற்பு தெரிவித்தனர். கூட்டத்தில் மொத்தம் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுகவைச் சேர்ந்த துணைத்தலைவர் தனம் உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu