நாமக்கல்லில் உலக தாய்பால் வார விழா: கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல்லில் உலக தாய்பால் வார விழா: கலெக்டர் பங்கேற்பு
X

நாமக்கல்லில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவில் கொழு கொழு குழந்தைகள் போட்டியில் வெற்றிபெற்ற குழந்தையின் தாய்க்கு, கலெக்டர் ஸ்ரேயாசிங் பரிசு வழங்கினார்.

நாமக்கல்லில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவில் கலெக்டர் கலந்து கொண்டு கொழு கொழு குழந்தைகளுக்கு பரிசு வழங்கினார்.

நாமக்கல்லில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டப்பணிகள் துறை சார்பில், உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் உலகத் தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் மட்டுமே சரிவிகிதத்தில் உள்ளது. தாய்ப்பால் கொடுப்பது தாயின் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. குழந்தை பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதன்பிறகு தாய்ப்பாலுடன் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கூடுதல் உணவு கொடுக்கப்படவேண்டும். சீம்பால் குழந்தைகளுக்கு முதல் தடுப்பு மருந்தாகும். இது எளிதில் ஜீரணமாக கூடிய அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளடக்கியது. கண்பார்வைக்கு தேவையான வைட்டமின்-ஏ சத்து நிறைந்துள்ளது. சீம்பாலில் உள்ள வெள்ளை அணுக்கள் வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்த்தொற்றுகளை தடுத்து, குழந்தைகளை ஆரோக்கியமாக வைக்கிறது என கூறினார். தொடர்ந்து தாய்ப்பால் வார உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

பின்னர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணிகள் துறையின் சார்பில் ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் கண்காட்சியினை கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து, கொழுகொழு குழந்தைகளுக்கான போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளின் தாய்மார்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஐசிடிஎஸ் மாவட்ட திட்ட அலுவலர் ஜான்சி ராணி, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, குழந்தைகள் நலத்துறை இணை பேராசிரியர் சுரேஷ்கண்ணன், ஆயுஷ் டாக்டர் பூபதிராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!