மேட்டூர் அணை பாசன வாய்க்கால்களில் முன்னதாக தண்ணீர் திறக்க வேண்டும் : கொங்கு ஈஸ்வரன் வேண்டுகோள்

இ.ஆர். ஈஸ்வரன், எம்எல்ஏ.,
நாமக்கல்,
இது குறித்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான இ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஆண்டுதோறும், மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனப்பகுதிகளுக்கு ஆகஸ்ட் மாதத்தில் தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் சேலம், நாமக்கல் ஈரோடு மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் பாசன பகுதி பயன் பெறுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டமும் கோடைகாலத்தில் உயர்ந்து வந்தது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதுவும் சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் மிக மோசமான நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பருவ காலங்களில் ஏரி, குளம், குட்டைகளில் சேகரித்த மழைநீர் அதிக வெயில் தாக்கத்தினால் வறண்டு நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும், குடிநீருக்கும் போதிய நீர் ஆதாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
சென்ற ஆண்டு மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களின் பாசனத்திற்கு மே 15 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதேபோன்று இந்த ஆண்டும், நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காரணத்தினால் முன்னதாகவே பாசனத்திற்கு நீர் திறந்து விடவேண்டும். தமிழ்நாடு அரசு இதனை கவனத்தில் கொண்டு மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் முன்னதாகவே பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu