பார்வையற்ற ஆசிரியர் முன் நடனமாடி வீடியோ வெளியீடு: 3 மாணவர்கள் டிஸ்மிஸ்

பைல் படம்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பன்னீர் செல்வம் என்பவர் வர லாற்று ஆசிரியராக, கடந்த 10 ஆண்டுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். கண் பார்வையற்ற இவர் மாணவ, மாணவியருக்கு மிகுந்த ஆர்வத்துடன் பாடங்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசிரியர் பன்னீர்செல்வம் 9ம்வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது 2 மாணவர்கள். சினிமா பாடலுக்கு ஏற்ப வகுப்பறையில் நடனம் ஆடியுள்ளனர். அதை ஒரு மாணவர் செல்போனில் படம் பிடித்தார். இதை உணர்ந்த ஆசிரியர், அந்த மாணவர்களை அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளார்.
ஆனால் அந்த இரு மாணவர்களும், மிகவும் ஒழுங்கீனமாக ஆசிரியரின் அருகில் சென்று அவரை கேலி செய்வது போல, தொடர்ந்து நடனம் ஆடியுள்ளனர். இதை மற்ற மாணவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். இந்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்த மாணவர், அதை நண்பர்களின் வாட்ஸ்அப் குரூப்புகளுக்கு அனுப்பியுள்ளார்.
இந்த வீடியோ வைரலாக பரவியது. வீடியோவை பார்த்த அரசு பள்ளி ஆசிரியர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். பள்ளிக்கு வந்த மாணவர்கள் முக கவசமும் அணியவில்லை என்பதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து ஆசிரியர் பன்னீர்செல்வம், தலைமை ஆசிரியர் குணசேகரனிடம் புகார் கூறினார். அதைத் தொடர்ந்து 3 மாணவர்களின் பெற்றோரையும் பள்ளிக்கு வரவழைத்தனர். அவர்களிடம், தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் விசாரித்தனர்.
அதைத் தொடர்ந்து வகுப்பறையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதுடன், அதை வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் வெளியிட்ட 3 மாணவர்களையும் அப்பள்ளியில் இருந்து நீக்கம் செய்து, அவர்களுக்கு உடனடியாக டி.சி வழங்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், பள்ளிக்கு செல்போன் கொண்டுவர மாணவர்களுக்கு அனுமதியில்லை. இதை ஆசிரியர் கள் கவனிக்க வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளக்கூடாது என பெற்றோர்கள் கண்டிக்க வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் 3மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu