திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி கோட்டையில் குடியேறும் போராட்டம்: விவசாயிகள் சங்கம்
நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாமக்கல் வேலுசாமி.
கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி சென்னையில் கோட்டையில் குடியேறும் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாமக்கல் வேலுசாமி இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில், 2021ல், நடந்த சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., ஆட்சி பொறுப்பிற்கு உள்ள, தமிழக விவசாயிகளுக்கு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்படும் என, உறுதி அளித்ததற்கு மாறாக, ஆட்சி பொறுப்பிற்கு வந்து 4 ஆண்டுகள் ஆனநிலையில், தமிழக விவசாயிகளுக்கு, கொடுத்த தேர்தல் வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாமல் இருப்பது, திராவிட மாடல் ஆட்சி, துரோகம் செய்துள்ளது. கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,000 வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், அறிவித்த விலை அமல்படுத்தவில்லை. தற்போது, கரும்பு விவசாயிகளுக்கு, உற்பத்தி செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு, கட்டுபடியான விலையாக, டன் ஒன்றுக்கு ரூ. 6,000 வழங்க வேண்டும்.
நெல்லுக்கு ஆதார விலையாக, குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தும், இதுவரை அவற்றை அமல்படுத்தவில்லை. நெல் உற்பத்தி செலவினங்களை கருத்தில் கொண்டு, குவிண்டால் ஒன்றுக்கு, ரூ. 3,500 ஆக அரசு அறிவிக்க வேண்டும். தமிழகம் முழுவதும், ஆற்றுப்படுகையில் மழைநீரை சேமிக்கும் வகையில் ரூ. 10,000 கோடி மதிப்பில், 1,000 தடுப்பணைகள் கட்டுப்படும் என அறிவித்தது. ஆனால், இதுவரை, 200 தடுப்பணைகள் கூட கட்டவில்லை. தி.மு.க. அரசு நீர் மேலாண்மையிலும் தோற்றுவிட்டது.
தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் சமையலுக்கு வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியும், இதுவரை இத்திட்டம் செயல்படுத்தவில்லை.
தமிழகத்தில் உள்ள தென்னை, பனை விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைப்பதற்கு, தமிழக அரசு கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்க, 2004, ஜூலை 29ல், ஐகோர்ட் உத்தரவிட்டது. தமிழக அரசு, டாஸ்மாக் கடை மூலம், மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மதுவிற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது. வரும், 26ம் தேதி, குடியரசு தினத்திற்கு பின், தமிழகத்தில் தென்னை மரத்தில் இருந்து கள் இறக்கி, சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும். திமுக அரசு கடந்த சட்டசபை தேர்தலில் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி விரைவில் சென்னையில் கோட்டையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மேலும், 2026 சட்டசபை தேர்தல் வாக்குறுதியில், தமிழகத்தில் உள்ள கள்ளுக்கான தடையை நீக்கி, கள்ளுக்கடை திறக்க முதல் வாக்குறுதியாகவும், முதல் கையெழுத்து போடும் கட்சிக்கு ஆதரவு அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu