பாதுகாப்பு கருதி அனைத்து பொதுத்தேர்வு அறைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த ஆசிரியர் சங்கம் கோரிக்கை

பாதுகாப்பு கருதி அனைத்து பொதுத்தேர்வு அறைகளிலும்    கண்காணிப்பு கேமரா பொருத்த ஆசிரியர் சங்கம் கோரிக்கை
X

நாமக்கல் ராமு, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி, அரசு பொதுத்தேர்வு நடைபெறும் அனைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாமக்கல்,

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி, அரசு பொதுத்தேர்வு நடைபெறும் அனைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் நாமக்கல் ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு முழுவதும் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நேர்மையாக நடப்பதை உறுதி செய்யவும், ஆசிரியர்கள், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் பொதுத்தேர்வு நடைபெறும் அனைத்து பள்ளிகளின் தேர்வு அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற அறையில் அறை கண்காணிப்பாளராக இருந்த முதுகலை ஆசிரியர் மீது, மாணவி பாலியல் புகார் கொடுத்ததால், ஆசிரியர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத்தேர்வு நடைபெற்று அறையில் நடைபெற்றதாக கூறப்படும் இது போன்ற புகார்கள் மற்றும் அது சார்ந்த உண்மை நிலவரத்தை அறிவதற்கும், பொதுத்தேர்வு எழுதும் அறையில் நடைபெறக்கூடிய உண்மையான நிகழ்வுகள் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாக்கப்படுவதற்கும், கேமராக்கள் பொருத்த, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பொதுத்தேர்வு நடைபெறும் அறையில் விதிமுறைகளுக்கு முரணாக செயல்படும் மாணவ மாணவிகளை கண்டித்தால், அறைக் கண்காணிப்பாளராக உள்ள ஆசிரியர் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டுகளைச் சொல்வதும், அவரை மிரட்டுவதும், அவர் பயணம் செய்து, அப்பள்ளியில் நிறுத்தி இருக்கக்கூடிய அவரது வாகனத்தை சேதப்படுத்தும் நிகழ்வுகளும் தற்போது நடைபெற ஆரம்பித்துள்ளது. இதில் உண்மை நிலையை கண்டறிய அனைத்து நிலைகளிலும் முழுமையாக விசாரித்த பிறகே தேர்வு பணியில் ஈடுபட்ட ஆசிரியர் மீது, கைது உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

எனவே 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் அனைத்து பள்ளிகளின் தேர்வு அறைகளில் அவசியம் கண்காணிப்பு கேமரா பொருத்துவது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானதாக அமையும். மேலும் நேர்மையான முறையில் படித்துத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் இது நல்லது. நேர்மையான தேர்வு முறையும், அதைத் தொடர்ந்து சரியான மதிப்பீடு மற்றும் ரிசல்ட் வெளியீடு என்பதே எதிர்கால தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்லது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story