நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் எண்ட் டூ எண்ட் ஸ்கேன் செய்து விற்பனை

பைல் படம்
நாமக்கல்,
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில், மதுபாட்டில்கள் விற்பனையை முறைப்படுத்தும் வகையில், எண்ட் டூ எண்ட் விற்பனை என்ற முறையை, மாவட்ட வாரியாக டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது. இதன்படி, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சப்ளை செய்யப்படும் மதுபான நிறுவனங்களில் தொடங்கி, கடைகளில் மதுபாட்டில் விற்பனை செய்வதுவரை, ஸ்கேனிங் முறை அமல்படுத்தப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்த்தில், உள்ள 169 டாஸ்மாக் மதுபானக் கடைகளில், ஸ்கேனிங் முறையில் மதுபாட்டில் விற்பனை இன்று (மே, 12) முதல் தொடங்குகிறது. இந்த புதிய திட்டத்தால், கடைகளில் இருந்து ஒவ்வொரு மதுபாட்டிலும் ‘ஸ்கேன்’ செய்யப்பட்ட பிறகே விற்பனை செய்ய வேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது.
மேலும், இதன் மூலம் டாஸ்மாக் கடைகளில் மொத்த விற்பனை, மது பானங்களின் வகைகள் உள்ளிட்ட விபரங்களையும் உடனுக்கு உடன் தெரிந்துகொள்ள முடியும்.
இதுகுறித்து, டாஸ்மாக் பணியாளர்கள் கூறியதாவது:
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் விற்பனைக்கு ஸ்கேனிங் முறை அமலுக்கு வந்துள்ளதால், விற்பனை விபரங்கள் அனைத்தும், உடனுக்குடன் டாஸ்மாக் அதிகாரிகளால் தெரிந்துகொள்ள முடியும். மேலும், மதுபாட்டில் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் தொடங்கி, அதை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவது வரை தொடர்ந்து கண்காணிக்க முடியும். இதற்காக, ஒவ்வொரு மது பெட்டிகள் மற்றும் மதுபாட்டில்களில் ‘ஹாலோ கிராம் ஸ்டிக்கர்கள்’ ஒட்டப்படுகிறது. மொத்தம், 5 முறை ஸ்கேன் செய்யப்படுவதால், எந்த மதுப்பெட்டி எந்த கடைக்கு சென்றுள்ளது, எந்த தேதியில் விற்பனை செய்யப்பட்டது என்ற விபரங்களையும் அதிகாரிகள் சுலபமாக தெரிந்துக்கொள்ள முடியும். இந்த ஸ்கேனிங் கருவியை, டாஸ்மாக் கடைகளின் தினசரி விற்பனை அடிப்படையில் வழங்கியுள்ளனர். அதாவது, தினமும், ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும் கடைக்கு ஒரு கருவியும், 2 லட்சம் என்றால், 2 கருவி என்ற அடிப்படையில் வழங்கியுள்ளனர்.
அதேபோல், டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12:00 மணிக்கு திறந்து, இரவு, 10:00 மணிக்கு மூடப்படுகின்றன. இந்த நேரத்தில் மட்டுமே ஸ்கேன் செய்து மதுபாட்டில்களை விற்பனை செய்ய முடியும். பணி நேரத்துக்கு முன்னதாகவோ அல்லது பின்போ ஸ்கேன் செய்து விற்க முடியாது. ஸ்கேன் செய்யாமல் விற்பனை செய்தால், அது அந்த கடையின் விற்பனையாளருக்கு பிரச்சினை ஏற்படும். புதிய நடைமுறையால் கடைகளில் இருப்பு விபரங்களில் முறைகேடு, பணத்தை செலுத்தாமல் முறைகேடு செய்வது தடுக்கப்படும். ஸ்கேன் கருவியில் ‘நெட்ஒர்க்’ பிரச்சினை இருந்தால், பாட்டில்களை ஸ்கேன் செய்து, பின்னர் கணக்குக்கு கொண்டுவர முடியும். இதன்மூலம் டாஸ்மாக் கடைகளில் சரக்கு விற்பனையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu