தற்காலிக கால்நடை மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித்தலைவர் சித்திக் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட கால்நடை டாக்டர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள்: தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறையில் உள்ள வழக்குகளின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக கால்நடை உதவி மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
இதையொட்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 818 தற்காலிக மருத்துவர்களை, தொகுப்பூதிய அடிப்படையில் தமிழக அரசு நியமனம் செய்தது. அவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஏற்கெனவே டிஎன்பிஎஸ்சி மூலம் நடைபெற்ற தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் விசாரனை நடத்த வேண்டும்.
தமிழகத்தில், கால்நடை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ஏற்படுத்தி, காலியாக உள்ள கால்நடை உதவி மருத்துவர்கள் பணியிடங்களை வெளிப்படையாக நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் முன்னாள் செயலாளர் டாக்டர் பாலாஜி முன்னிலை வகித்தார். மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் டாக்டர் செழியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது: தமிழகத்தில் புதிய கால்நடை மருத்துவக்கல்லூரிகளை திறந்து, கால்நடை மருத்துவர்களை அதிக அளவில் உருவாக்கினால் மட்டும் போதாது.
தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து கால்நடை மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதுடன், ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கால்நடை மருத்துவம் படித்தவர்களுக்கு அது சார்ந்த தொழிலை துவக்குவதற்கு மானிய உதவியுடன் கடன் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களும் பொருளாதாரத்தில் முன்னேறுவார்கள், நாட்டின் பொருளாதாரமும் பெருகும் என்றார்.
இதில், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவீத், கால்நடை மருத்துவ பட்டதாரிகள் சங்க செயலாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu