அதிமுகவில் மீண்டும் சசிகலா: பதிலளிக்க முன்னாள் அமைச்சர் தங்கமணி மறுப்பு

அதிமுகவில் மீண்டும் சசிகலா: பதிலளிக்க முன்னாள் அமைச்சர் தங்கமணி மறுப்பு
X

தங்கமணி, முன்னாள் அமைச்சர்

அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என அதிமுகவினரே குரல் எழுப்பி வருகின்றனர் என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி பதிலளிக்க மறுத்து கிளம்பினார்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் பதவிக்கான தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான தங்கமணி, நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாமக்கல் மாவட்டம், எருமபட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கு வரும் 7ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மொத்தம் 15 உறுப்பினர்கள் உள்ள எருமப்பட்டி ஒன்றியத்தில், அதிமுக -9, பாஜக 1, திமுக 5 கவுன்சிலர்கள் உள்ளனர். தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும். அதிமுக கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்.

இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்ட தலைவர் தேர்தலை கண்டிப்பாக நடத்த வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதிமுக உறுப்பினர்களை நான் கடத்தி விட்டதாக, என் மீது பொய் வழக்கு போடப்பட்டன. உறுப்பினர்களை யாரும் கடத்தவில்லை. தேர்தல் ஜனநாய முறைப்படி நடைபெறும் என நம்புகிறேன் என்றார்.

அப்போது அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என அதிமுகவினரே குரல் எழுப்பி வருகின்றனர் என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளிக்க மறுத்து அவர் கிளம்பிச் சென்றார்.

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக இருந்த வரதராஜன், கடந்த ஓராண்டுக்கு முன் கொரோனா பாதிப்பால் இறந்துவிட்டார். இதையடுத்து அவர் உறுப்பினராக இருந்த 15வது வார்டுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கான தேர்தல் ஏற்பாடு செய்து இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது. இச்சூழலில் மீண்டும் வருகிற 7ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்