கோடைகாலத்தை முன்னிட்டு சேலம்–கரூர் பாசஞ்சர் ரயிலை திருச்சி வரை நீட்டிக்க கோரிக்கை
பைல் படம்.
கோடைகாலத்தை முன்னிட்டு, சேலத்தில் இருந்து கரூர் வரை இயக்கப்படும் பயணிகள் ரயிலை, திருச்சி வரை நீட்டிக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் – கரூர் அகர ரயில் பாதை திட்டம் கடந்த 2013ம் ஆண்டு முடிக்கப்டட்டு ரயில் இயக்கப்படுகிறது. சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக இயக்கபடும் பயணிகள் ரயில் காலை 6 மணிக்கு சேலத்தில் புறப்பட்டு ராசிபுரம், நாமக்கல், மோகனூர் வழியாக, 7.45 மணிக்கு கரூரை சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் காலை 8.30 மணிக்கு, கரூரில்புறப்பட்டு 10.15 மணிக்கு சேலம் சென்றடைகிறது. அதேபோல், மாலை 5.30 மணிக்கு, சேலத்தில் புறப்பட்டு, இரவு 7.15 மணிக்கு கரூர் செல்கிறது. அங்கிருந்து, இரவு 8.00 மணிக்கு புறப்பட்டு 10.15 மணிக்கு சேலம் சென்றடைகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த பயணிகள் ரயில் காலை, இரவு நேரங்களில் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரயிலை திருச்சி வரை நீட்டிக்க வேண்டும் என்பது ரயில் பயணிகளின் நீண்டகால கோரிக்கையாகும்.
இதுகுறித்து, ரயில் பயணிகள் கூறியதாவது:- விரைவில் பொதுத்தேர்வு முடிந்து, பள்ளிகளுக்கு ஆண்டு விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. அதனால், கோடைகாலத்தையொட்டி, சேலத்தில் இருந்து கரூர் வரை இயக்கப்படும் பயணிகளை ரயிலை, திருச்சி வரை நீட்டிக்க வேண்டும். சேலம், நாமக்கல், ராசிபுரம், மோகனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோயில்களுக்கு, பஸ்சில் தான் சென்று வருகின்றனர். பஸ் மாறி மாறி செல்வதால், மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
அதனால் சேலத்தில் இருந்து இயக்கப்படும் பயணிகள் ரயிலை, திருச்சி வரை நீடித்தால், திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் பொதுமக்கள் இறங்கி, அங்கிருந்து டவுன் பஸ்கள் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மற்றும் சமயபுரம் கோயில்களுக்கு டவுன் பஸ் மூலம் செல்ல வசதியாக இருக்கும். இதன் மூலம், சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு அலைச்சலும், நேரமும் பெருமளவில் குறைவதுடன், கட்டண செலவும் குறையும். மேலும், திருச்சி பகுதிகளில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கும் வசதியாக இருக்கும். எனவே, கோடைகால விடுமுறை நெருங்குவதால், சேலத்தில் இருந்து தினமும் இயக்கப்படும் பயணிகள் ரயிலை, திருச்சி வரை நீட்டிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu