சர்க்கரை ஆலையின் தவறான நடவடிக்கையால் ரூ.4 கோடி இழப்பு: விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

சர்க்கரை ஆலையின் தவறான நடவடிக்கையால் ரூ.4 கோடி இழப்பு: விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
X

பைல் படம்.

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தவறான நடவடிக்கையால் விவசாயிகளுக்கு ரூ.4 கோடி இழப்பு * கரும்பு விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தவறான நடவடிக்கையால், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள ரூ.4 கோடி இழப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் மணிவண்ணன், பொதுச்செயலாளர் மணிவேல் ஆகியோர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2021-2022ம் ஆண்டு கரும்பு அரவைப் பருவம் கால தாமதாக தொடங்கப்பட்டது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகும் ஆலை அரைவை தொடர்ந்ததால், வெளி ஆலைகளில் இருந்து 60,000 டன் கரும்பு கொண்டு வரப்பட்டது. வெளி ஆலைகளில் இருந்து கரும்பு எடுத்து வரப்பட்டதால், ஆலைக்கு பதிவு செய்யப்பட்ட கரும்பு விவசாயிகளின் கரும்பை வெட்டுவதில் கால தாமதம் ஏற்பட்டு, மகசூல் குறைந்தது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு ஆலை இயங்க நேர்ந்ததால் கரும்பு வெட்டுக்கூலி அதிகமாகி விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. 63,000 டன் கரும்பை வெளி ஆலைகளில் இருந்து எடுத்து அரைவை செய்யப்பட்டதால் போக்குவரத்து வாடகையாக சுமார் ரூ. 4 கோடி ஆலைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சராசரி சர்க்கரை கட்டுமானத்திறன் 8.54 உள்ள நிலையில், வெளி ஆலைகளில் இருந்து எடுக்கப்பட்ட 63,000 டன் கரும்புக்கு, 9.5 சதவீதம் சர்க்கரை கட்டுமானத்திறன் விலையில் பணம் வழங்கப்பட்டதால் சுமார் ரூ. 1.75 கோடி ஆலைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்குப்பிறகு, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டிய விவசாயிகளுக்கு கூடுதலாக டன் ஒன்றுக்கு ரூ.500 முதல் ரூ.600 ரூபாய் வரை வெட்டுக்கூலியாக கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. பொங்கல் பண்டிகை வரை வெட்டுக்கூலி ரூ.800 முதல் ரூ.900 வரை இருந்தது. பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ரூ.1400 முதல் ரூ.1500 என கூலி உயர்ந்தது. இதனால் சராசரியாக டன் ஒன்றுக்கு ரூ.500 கூடுதலாக விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு சொந்தக் கரும்பு 62,000 டன்கள் அரைவை செய்யப்பட்டது. ஆலை அரைவைக்குப் பிறகு நிலுவை ஏற்பட்ட 18,000 டன் கரும்பை பிற ஆலைகளுக்கு அனுப்பியது என மொத்தம் 80,000 டன் கரும்புக்கு ரூ.4 கோடி வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த விவசாயிகளின் கரும்பு குறைந்த அளவே இருந்த நிலையில், வெளிக்கரும்பை எடுத்துஅரைத்ததால், சர்க்கரை கட்டுமானத்திறன் குறைந்துள்ளது. ஆலை நிர்வாகம் சரியாக திட்டமிடாமல் இப்படி செய்ததால் ஆலைக்கும், விவசாயிகளுக்கும், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக முதல்வர் இது குறித்து முறையான விசாரணை நடத்தி, விவசாயிகள் சப்ளை செய்த 80 ஆயிரம் டன் கரும்புக்கு, ஒரு டன்னுக்கு ரூ.500 வீதம் ரூ.4 கோடி இழப்பீட்டினை 90 நாட்களுக்குள் கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கில் வழங்க வேண்டும். மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற இழப்பு ஏற்படாமல் ஆலையை நடத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா