தொடர் மழையால் மலேரியா, காலரா தொற்று நோய் அபாயம்: கலெக்டர் எச்சரிக்கை
நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்.
நாமக்கல் மாவட்டத்தில், தெடர் மழையின் காரணமாக, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் தற்போது, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதில் இருந்து பாதுகாக்க தமிழக அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும், பருவமழை தீவிரமடைந்து அடிக்கடி மழை பெய்துவருகிறது. இதையொட்டி, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது, மழையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொது மக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், டெங்கு, மலேரியா, மஞ்சருள்காமாலை, காலரா மற்றும் வாந்திபேதி போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொது மக்கள் அனைவரும், நன்கு கொதித்து ஆறிய தண்ணீரை மட்டுமே குடிநீராக பயன்படுத்த வேண்டும் அல்லது குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீரினை மட்டுமே அருந்த வேண்டும். சூடான உணவு பொருட்களை மட்டுமே சாப்பிட வேண்டும். பழைய கெட்டுபோன உணவு பொருட்களையும், ஈ மொய்த்த உணவு பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.
காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற நோய்கள் ஏற்பட்டால், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். மழைக்காலங்களில், வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொது மக்கள் அனைவரும் விழிப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். தங்கள் பகுதியில் யாருக்காவது தொற்று நோய்கள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu