நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரேவதிக்கு சிறந்த திருநங்கை விருது: முதல்வர் வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரேவதிக்கு  சிறந்த திருநங்கை விருது: முதல்வர் வழங்கல்
X

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரேவதிக்கு, சிறந்த திருநங்கைக்கான விருதினை, முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அருகில் அமைச்சர் கீதாஜீவன்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ரேவதிக்கு 2025-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

நாமக்கல்,

சென்னை தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் 2025-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ரேவதி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பொன்னி ஆகியோருக்கு திருநங்கைகளின் நலனுக்காக அவர்கள் ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டி சிறந்த திருநங்கை விருதினை முதல்வர் வழங்கினார்.

திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பு மற்றும் சமூக அங்கீகாரத்தை வழங்கி அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் கடந்த 2008ம் ஆண்டு திருநங்கைகள் நல வாரியம் தமிழக சமூக நலத்துறை அமைச்சரை தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்டத. தற்போது கடந்த 2ம் தேதி முதல், இந்த நல வாரியம் திருத்தியமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் குறிப்பிடத்தக்க முன்முயற்சியாகவும், அவர்களை சமூகத்தின் முக்கிய பங்களிப்பாளர்களாக அங்கீகரித்து சிறப்பிக்கும் விதமாகவும் 2021-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திருநங்கை விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது திருநங்கைகளின் நலனுக்காக அயராது பாடுபட்டு, சமூகத்தில் முன்மாதிரியாகத் திகழும் திருநங்கைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதினைப் பெறுபவருக்கு ரூ. 1 லட்சம் மதிப்புள்ள காசோலையும், அவர்களது சேவை மற்றும் சாதனைகளைப் பாராட்டும் விதமாக சான்றிதழும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் தனது சொந்த உழைப்பாலும், தனித் திறமையாலும் முன்னேறி, பல திருநங்கை மக்களின் வாழ்வில் மாற்றம் கொண்டு வந்து, அவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வரும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ரேவதி என்பவரின் சிறந்த சமூக சேவையைப் பாராட்டியும், திருநங்கைகள் தங்களது அயராத முயற்சியால் கல்வியிலும், கலையிலும் சிறந்து விளங்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பொன்னி என்பவரின் சிறந்த சமூக பங்களிப்பைப் பாராட்டியும், தமிழ்நாடு அரசின் 2025-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது மற்றும் தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story