பல்வேறு நிறுவனங்களில் பணிக்கு அமர்த்திய 27 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

நாமக்கல் மாவட்டத்தில் மீட்கப்பட்ட, குழந்தை தொழிலாளர்கள் மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களுடன், கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்துரையாடினார்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் இரண்டு குழுக்களாக வருவாய்த் துறை, தொழிலாளர் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், சைல்டு லைன் அமைப்பின் அலுவலர்கள் மற்றும் போலீசார் குழந்தை தொழிலாளர்கள் குறித்து கூட்டாய்வு மேற்கொண்டனர்.
சேந்தமங்கலம் தாலுகா, முத்துகாபட்டியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் 16 வயதுடைய 2 ஆண் வளரிளம் பருவத்தினர் கண்டறியப்பட்டனர். பெருமாப்பட்டியிலும், குமாரபாளையம் தாலுகா படைவீடு பகுதியிலும் ஸ்பின்னிங் மில்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு பணிபுரிந்த 13 வயதுடைய 2 பெண் குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். மேலும் சோதனையில், 20 பெண் வளரிளம் பருவத்தினர், 5 ஆண் வளரிளம் பருவத்தினர் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்கள் குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
வளரிளம் பருவத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியபின், அவர்களது விவரங்கள் அடங்கிய பதிவேடுகள் ஏதும் பராமரிக்கப்படவில்லை. தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டத்தின் கீழ் அனுமதி பெறவில்லை. இளைஞர் நீதிச்சட்டத்தின்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். அந்நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஓய்வு நேர இடைவேளை முறையாக அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களின் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளைகள், கோழிப்பண்ணைகள், ஸ்பின்னிங்மில்ஸ், உணவு நிறுவனங்கள், வாகனம் பழுது பார்க்கும் பணிமனைகள், டெக்ஸ்டைல்ஸ், திருமண மண்டபங்கள் மற்றும் அனைத்து தொழில் இடங்களிலும் தொடர் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, குழந்தை தொழிலாளர்களையோ, வளரிளம் பருவத்தினரையோ பணிக்கு அமர்த்தினால் குறைந்தபட்ச அபராதம் ரூ. 20,000/- மற்றும் சட்டப்படி தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu